செய்திகள்
ராமதாஸ்

தமிழக மக்கள் ஊரடங்கை இரட்டிப்பு உறுதியுடன் கடைபிடிக்க வேண்டும் - ராமதாஸ்

Published On 2020-04-24 03:05 GMT   |   Update On 2020-04-24 03:05 GMT
தமிழக மக்கள் ஊரடங்கை இரட்டிப்பு உறுதியுடன் கடைபிடிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை அடுத்த சில நாட்களில் கட்டுப்படுத்துவது சாத்தியம் தான் என்ற நம்பிக்கையை மருத்துவத்துறை புள்ளிவிவரங்கள் ஏற்படுத்தியுள்ளன. அதேநேரத்தில் இலக்கை எட்டுவதற்கு முன்பே சலித்துக் கொண்டு, சுணங்குவது நம்மை வெற்றிக்கு பதிலாக தோல்விக்கு அழைத்து சென்று விடும். எனவே, கொரோனா நோய் ஒழிப்புப் போரை மக்கள் உற்சாகத்துடன் தொடர வேண்டும். கொரோனா வைரஸ் நோயை ஒழிப்பதற்கான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு ஒரு மாதம் நிறைவடைகிறது.

அடுத்த 10 நாட்களுக்கு மிகவும் கவனமாக இருந்து விட்டால் கொரோனா வைரஸ் ஒழிப்புப் போரில் வெற்றியை தொட்டு விடலாம். ஆனால், வெற்றி இலக்கைத் தொடுவதற்கு இன்னும் 25 சதவீத தொலைவு இருக்கும் நிலையிலேயே, மக்களிடம் ஒருவிதமான அலட்சியம் ஏற்படத் தொடங்கி விட்டதை உணர முடிகிறது.

கொரோனாவை ஒழிப்பதற்காக ஒரு மாதமாக ஊரடங்கை கடைபிடித்து வரும் நாம், அடுத்த 10 நாட்களுக்கும் அதே ஒழுங்கையும், உறுதியையும் கடைபிடிக்காவிட்டால் கொரோனாவை ஒழிக்க முடியாது. எனவே, கொரோனா வைரசை ஒழிப்பதற்காக அடுத்த 10 நாட்களுக்கு தமிழக மக்கள் ஊரடங்கை இரட்டிப்பு உறுதியுடன் கடைபிடிக்க வேண்டும்.

இதற்காக, அரசும், காவல்துறையும் மேற்கொள்ளும் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளும் மக்கள் மனதில் அதிகரிக்கும் அலட்சியத்தைப் போக்க நம்பிக்கையூட்டும் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News