செய்திகள்
பனங்கிழங்குகள்

பயிர் செய்த இடத்திலேயே அழுகும் பனங்கிழங்குகள்

Published On 2020-04-23 14:20 GMT   |   Update On 2020-04-23 14:20 GMT
திசையன்விளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளைந்த பனங்கிழங்குகளை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாததால், அவை பயிர் செய்த இடத்திலேயே முற்றி அழுகும் நிலையில் உள்ளது.
திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனங்கிழங்கு அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இங்கு விளையும் பனங்கிழங்குகள், வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது. வெளியூர்களில் வசிக்கும் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு வந்து விட்டு திரும்பும்போது பனங்கிழங்குகளை விரும்பி வாங்கி செல்வார்கள். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வெளியூர்களுக்கு பனங்கிழங்குகளை அனுப்பி வைக்க முடியவில்லை. இதனால் அவை திசையன்விளை மார்க்கெட்டுக்கு மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

இங்கே வழக்கத்தைவிட குறைவான மக்களே அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருவதால், பனங்கிழங்கு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விளைந்த பனங்கிழங்குகளை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாததால், அவை பயிர் செய்த இடத்திலேயே முற்றி அழுகும் நிலை உள்ளது.

இதனால் பனங்கிழங்கு விலை மிகவும் குறைவாக உள்ளது. தடை உத்தரவுக்கு முன்பு 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.130 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு கட்டு ரூ.50 முதல் ரூ.60 வரையே விற்கப்பட்டது. இதனால் பனங்கிழங்கு பிடுங்கி எடுக்க ஆகும் செலவுகூட கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். விலை குறைந்தாலும் விற்பனை மந்தமாகவே இருப்பதாக வியாபாரிகளும் கூறினர்.
Tags:    

Similar News