செய்திகள்
சென்னை ஐகோர்ட்

கொரோனா நோயாளிகளின் பெயர்களை வெளியிடும்படி உத்தரவிட முடியாது- சென்னை ஐகோர்ட்

Published On 2020-04-22 10:13 GMT   |   Update On 2020-04-22 10:13 GMT
கொரோனா நோயாளிகளின் பெயர்களை வெளியிட உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

அந்த மனுவில், ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் மற்றும் அவர் சார்ந்துள்ள பகுதியை அரசு இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடுவதால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்காணிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பதை தடுக்கவும் முடியும்’ என கூறப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு காணொலி மூலமாக இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது, மனுதாரரின் மனுவிற்கு பதிலளித்த தமிழக அரசு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட்டால் சமூக பிரச்சினை ஏற்படும் என கூறியது.

‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஒருவரின் விவரங்களை வெளியிடுவது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் நோயாளிகளின் பெயர்களை வெளியிடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது’ என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிடும்படி உத்தரவிட முடியாது என்று கூறினர். அத்துடன், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 
Tags:    

Similar News