செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளை யாரும் தடுக்கக்கூடாது- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published On 2020-04-17 08:39 GMT   |   Update On 2020-04-17 11:25 GMT
விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம்:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து இன்று காலை தனது சொந்த மாவட்டமான சேலத்துக்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார்.

சேலம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர் ராமன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் கிரிலோஸ்குமார், மஞ்சுநாதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவிய 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சேலத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா நிவாரணத் தொகையான ரூ.1,000 குடும்ப அட்டைதாரர்களில் 98 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டு விட்டது.

அரசு செய்த ஆர்டரின் பேரில் தமிழகத்திற்கு 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் வந்துள்ளது. 1.25 லட்சம் ரேபிட் பரிசோதனைக் கருவிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் கருவிகள் இன்னும் வரவில்லை.

விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக்கூடாது. சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புகளை எடுத்துச்செல்ல தடையில்லை, சர்க்கரை ஆலைகள் இயங்கவும் தடையில்லை.

தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும்.

மருத்துவம் சார்ந்த கொரோனா விஷயத்தில் ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா?. மருத்துவ வல்லுநர்கள் கூறும் ஆலோசனையை அரசு ஏற்கும். எதிர்க்கட்சிகள் எந்த வகையில் ஆலோசனை கூற முடியும்.

இக்கட்டான நேரத்தில் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள எதிர்க்கட்சியினர் முனைகிறார்கள். குறை சொல்ல இது நேரம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News