செய்திகள்
மும்பையில் இருந்து சுமார் 1,000 கி.மீ. தூரம் நடந்தே வந்த பட்டதாரிகள்.

மும்பையில் இருந்து 1,000 கி.மீ. நடந்தே வந்த நாகை, திருவாரூர் பட்டதாரிகள்

Published On 2020-04-05 09:24 GMT   |   Update On 2020-04-05 09:27 GMT
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மும்பையில் இருந்து 1,000 கி.மீ. நடந்தே வந்த நாகை, திருவாரூர் பட்டதாரிகள் திருச்சியில் இருந்து வாகனத்தில் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருச்சி:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 22 பேர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே சோலாப்பூரில் செயல்பட்டு வரும் வேளாண் உபகரணங்கள் மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.

இவர்கள் அனைவரும் பி.எஸ்சி, எம்.எஸ்சி. வேளாண் பட்டதாரிகள் ஆவர். அனைவரும் சோலாப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். சம்பளத்தை பெற்றோருக்கு அனுப்பி வைக்கும் அவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை தங்களது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து போக்குவரத்தும் முடங்கியது. மேலும் சோலாப்பூரில் உள்ள வேளாண் உபகரணம் தயாரிப்பு நிறுவனமும் மூடப்பட்டது. இதற்கிடையே அங்கு பணியாற்றி வருபவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சொந்த ஊருக்கு கிளம்பி வந்துவிடுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் சொந்த ஊர் செல்ல வழியின்றி அவர்கள் தவித்து வந்தனர். 

மேலும் ஒரு சில நாட்கள் மட்டுமே அவர்களுக்கு உணவு கிடைத்தது. அதன் பிறகு அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் வேறு வழியின்றி தங்களது சொந்த ஊருக்கு செல்ல 22 பேரில் 7 பேர் மட்டும் முடிவெடுத்தனர். சற்றும் யோசிக்காமல் கிடைத்த பிஸ்கெட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்களை மட்டும் எடுத்துக்கொண்டு கடந்த 29-ந்தேதி சோலாப்பூரில் இருந்து நடந்தே ஊருக்கு புறப்பட்டனர்.

வழியில் கிடைத்த சரக்கு வாகனங்களில் தொற்றிக் கொண்டு ஒருசில கிலோ மீட்டரை கடந்தனர். இரவு வேளையில் சாலையோரம் படுத்து உறங்கிய அவர்கள் பகலில் வெயிலையும் பொருட்படுத்தால் களைத்த உடலுடன் எப்படியாவது ஊர்போய் சேரவேண்டும் என்று நடந்தனர். மும்பையில் இருந்து கர்நாடக மாநிலம் வழியாக வந்த அவர்கள் 7 நாட்கள் நடந்து நேற்று மாலை திருச்சி மாவட்டம் முசிறியை வந்தடைந்தனர்.

அப்போது அதே ஊரை சேர்ந்த அருண் என்பவர் அவர்களிடம் விசாரித்தார். நடந்தை அறிந்த அவர் உடனடியாக மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு தெரிவித்தார். அதன்பேரில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, அந்த 7 பேரும் சொந்த ஊருக்கு செல்ல வாகன பாஸ் வழங்கி உதவினார்.

Tags:    

Similar News