செய்திகள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கேரள மக்களுக்கு உற்ற துணையாக தமிழகம் இருக்கும்- எடப்பாடி பழனிசாமி

Published On 2020-04-04 09:01 GMT   |   Update On 2020-04-04 09:01 GMT
அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை:

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், தமிழ்நாட்டில் இருந்து வரும் அனைத்து சாலைகளையும் கேரள அரசு மூடப்போவதாக செய்தி வெளியானது. ஆனால் இது போலியான செய்தி என கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்தார். 

‘இப்போது ஒரு போலி செய்தி வெளிவந்துள்ளது.  தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், தமிழ்நாட்டில் இருந்து வரும் அனைத்து சாலைகளையும் தடுக்க கேரளா முடிவு செய்துள்ளதாக வதந்தி பரவுகிறது. இதுபோன்ற ஒரு விஷயத்தை நாங்கள் நினைத்ததில்லை. அவர்கள் நம் அண்டை மாநிலத்தவர்கள் மட்டுமல்ல, அவர்களை நம் சகோதரர்களாகவே பார்க்கிறோம்’ என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார்.

இதையடுத்து, கேரள முதல்வரின் இந்த பேச்சு அடங்கிய வீடியோவை, தமிழக எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். 

‘கேரள மாநிலம், தமிழக மக்களை சகோதர சகோதரிகளாக அன்பு பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நட்புறவும் சகோதரத்துவமும் என்றென்றும் வளரட்டும்!’ என முதலமைச்சர் பதிவிட்டிருக்கிறார்.
Tags:    

Similar News