செய்திகள்
சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ்

சென்னையில் அனைத்து வீடுகளிலும் கொரோனா அறிகுறி சோதனை - மாநகராட்சி கமி‌ஷனர் தகவல்

Published On 2020-04-02 12:05 GMT   |   Update On 2020-04-02 12:05 GMT
சென்னையில் அனைத்து வீடுகளிலும் கொரோனா அறிகுறி சோதனையை கண்டறிய 15 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் காய்ச்சல் கண்காணிப்பு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதனை மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் வெளியிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் தற்போது கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள 21 பேரின் வீட்டை சுற்றி தலா 2 ஆயிரத்து 500 வீடுகளில் தினமும் சோதனை நடத்தப்படுகிறது.

இதில் மகளிர் குழுக்கள், பள்ளி ஆசிரியர்கள், மலேரியா பணியாளர்கள் உள்பட 6 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல சென்னை மாநகரம் முழுவதும் உள்ள 10 லட்சம் வீடுகளில் தினமும் சோதனை நடத்தப்படும். காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் வீடுகளில் இருக்கிறார்களா? என ஆய்வு செய்கிறார்கள்.

இதில் 15 ஆயிரம் மாநகராட்சி ஊழியர்கள், மகளிர் குழுக்கள், குழந்தைகள் மைய பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள கொரோனா கண்காணிப்பு செயலியை மாநகராட்சி இணையதள பக்கத்தை திறந்து அதில், monitoring app என்பதை ‘கிளிக்’ செய்து பதிவிறக்கம் செய்யலாம்.

இதில் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதாக கருதுபவர்கள் ‘செல்பி’ எடுத்து அனுப்பலாம். அதன் மூலம் சம்பந்தப்பட்ட நபரின் முகவரி, விவரம் வந்துவிடும். அதனை தொடர்ந்து உடனடியாக அந்த இடத்துக்கு சென்று மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். தேவைப்பட்டால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்படும்.

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த 4 பேருடன் தொடர்பில் இருந்தவர்களையும், தனிமைப்படுத்தி வருகிறோம். அந்த மாநாட்டில் பங்கேற்ற மற்றவர்களின் செல்போன் விவரங்களை வாங்கி அவர்கள் இருப்பிடத்தை காவல்துறை மூலமாக கண்டுபிடித்து வருகிறோம்.

அவர்களை தனிமைப்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கண்காணிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News