செய்திகள்
சத்குரு

கோவை ஈஷா கட்டிடங்களை மருத்துவ பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்- சத்குரு

Published On 2020-03-27 08:02 GMT   |   Update On 2020-03-27 08:54 GMT
கொரோனாவை கட்டுப்படுத்த கோவை ஈஷா கட்டிடங்களை மருத்துவ பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று அதன் நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
கோவை:

ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், கோவையில் உள்ள ஈஷா யோகா அறக்கட்டளைக்கு சொந்தமான கட்டிடங்களை தமிழக அரசு மருத்துவ பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் தேவை ஏற்பட்டால் ஈஷா தன்னார்வலர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்ற தயாராகவும் இருக்கின்றனர்.

தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது, கொரோனா வைரஸ் பாதிப்புகளில் மிக மோசமான ஒன்றாகும். உணவின்றி அவதியுறுவது உள்நாட்டு சண்டைகளுக்கும், இறப்புகளுக்கும் வழிவகுக்கும் என்பதை ஏற்கனவே வலியுறுத்தி இருந்தேன்.

பாதிப்புக்குள்ளாகும் இந்த பிரிவினரை பாதுகாத்திட உலகெங்கும் உள்ள பல லட்சக்கணக்கான ஈஷா தன்னார்வலர்களும் முன்வரவேண்டும்.

குறிப்பாக இந்தியாவிலுள்ள ஈஷா தன்னார்வலர்கள் ஒவ்வொருவரும், அவ்வாறு பாதிப்புக்குள்ளாகியிருக்கும் 2 நபருக்கான ஊட்டச்சத்துள்ள உணவை வழங்க வேண்டும். இந்த இக்கட்டான சூழலில் ஒவ்வொரு குடிமக்களும் தனிநபராக நம்மால் இயன்றதை செய்வது மட்டுமின்றி, உள்ளூர் அரசு நிர்வாகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பது நமது கடமை.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உலகம் முழுவதும் நடைபெறுவதாக இருந்த ஈஷா யோகா மையத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் கடந்த வாரம் முதல் தேதி குறிப்பிடப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பை, பாரிஸ், லண்டன், ஜோகன்பர்க், டர்பன், அட்லாண்டா, சான் பிரான்சிஸ்கோ, ஜூலூலாண்ட் மற்றும் நாஷ்வில்லி ஆகிய இடங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் செல்வதாக இருந்த சத்குருவின் சுற்றுப்பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News