செய்திகள்
கைது

முத்துப்பேட்டை அருகே மின் கம்பியை திருடிய 4 பேர் கைது- 2 பைக் பறிமுதல்

Published On 2020-03-26 08:44 GMT   |   Update On 2020-03-26 08:44 GMT
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே மின் கம்பியை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் சென்ற 2018ம் ஆண்டு கஜா புயலின் போது ஏராளமான மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தது. இதனையடுத்து மின்துறையினர் துரித பணிகள் மேற்கொண்டு சீரமைத்தனர். ஆனால் பழைய மின் கம்பங்கள் மின் கம்பிகளை அகற்றி எடுத்து செல்லவில்லை.

அதேபோல் சீரமைப்பு பணிகளுக்கு வந்த விலை உயர்ந்த மின் கம்பிகள் ஆங்காங்கே கேட்பாராற்று கிடக்கிறது. இதனால் சமூக விரோதிகள் பலர் அடிக்கடி இவைகளை திருடி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் முத்துப்பேட்டை அடுத்த மேலதொண்டியக்காடு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் சாலையோரம் மின்துறையால் போட்டு வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த காப்பர் மின் கம்பி ரோலை இரண்டு பைக்கில் வந்த 4பேர் கொண்ட ஒரு கும்பல் திருடி சென்றனர்.

இதனைக்கண்ட கிராம மக்கள் இரண்டு பைக்கில் வந்த 4 பேரை சுற்றி வளைத்து பிடித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் 4 பேரை விசாரணை நடத்தியதில் கீழவாடியக்காடை சேர்ந்த பக்கிரிசாமி மகன் லெனின் (28), சேகர் மகன் தினேஷ் (22), கல்யாணசுந்தரம் மகன் தேவதாஸ் (21), கற்பகநாதற்குளம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் மகன் விக்னேஷ் (20) ஆகியோர் என்றும் இவர்கள் இங்கு ஒன்றாக வந்து திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து 4பேரை கைது செய்தும் அவர்கள் வந்த 2 பைக்குகளையும் திருடப்பட்ட மின் கம்பிகளையும் பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்க்கொண்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News