செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

3 வாரங்களுக்கு ஊரடங்கை செயல்படுத்த வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Published On 2020-03-22 22:59 GMT   |   Update On 2020-03-22 22:59 GMT
3 வாரங்களுக்கு ஊரடங்கை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
சென்னை:

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் நடத்தப்பட்ட மக்கள் ஊரடங்குக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்திருக்கிறது. கொரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுப்பதில் மக்களுக்கு உள்ள அக்கறையை இது காட்டுகிறது. மக்கள் ஊரடங்குக்கு ஆதரவு தெரிவித்து வரும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா வைரஸ் நோயின் கொடிய தன்மை குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய பேரழிவுகள் குறித்தும் விளக்கி, அதைத் தடுக்க இந்தியா முழுவதும் 3 வாரங்களுக்கு முழு அடைப்பு மற்றும் ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஒரு வாரத்திற்கு முன் நான் ஆலோசனை தெரிவித்திருந்தேன்.

ஆனால், அப்போது கோரோனாவின் பாதிப்புகள் குறித்த அறியாமை காரணமாக, இவ்வளவு கடுமையான நடவடிக்கை தேவையா? என்று தயங்கியோர் கூட, ஊரடங்கை ஆதரிக்கும் மனநிலைக்கு வந்து விட்டனர். பிரதமர் மோடி அழைப்பு விடுத்த மக்கள் ஊரடங்குக்கு கிடைத்திருக்கும் ஆதரவு இதைத் தான் காட்டுகிறது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரி அரசும் கொரோனா வைரஸ் பாதிப்பின் விளைவுகளை உணர்ந்து வரும் 31-ந் தேதி வரை, காலையிலும், மாலையிலும் உணவுப்பொருட்கள் வாங்குவதற்கான சில மணி நேரம் இடைவெளி தவிர, முழுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. தேவையை பொருத்து அடுத்த மாதம் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கவும் புதுச்சேரி அரசு தயாராக இருக்கிறது.

இதையே 3 வாரங்களுக்கு நீட்டிக்கும் போது, சில இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனாலும் நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற இதைத் தவிர வேறு வழியில்லை.

ஆகவே, மக்கள் ஊரடங்கை நல்லத் தொடக்கமாக வைத்துக் கொண்டு 3 வாரங்களுக்கு ஊரடங்கை செயல்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அது தான் இந்தியாவின் இன்றைய அவசர, அவசியமான காரியமாகும்.

தனித்திருப்போம், தவிர்த்திருப்போம், விழித்திருப்போம், வைரசைத் தடுப்போம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News