செய்திகள்
அமைச்சர் உதயகுமார்

பொதுமக்கள் சுயகட்டுப்பாட்டை கடைப்பிடித்தால் கொரோனா வைரசை தடுக்கலாம்- அமைச்சர் உதயகுமார்

Published On 2020-03-20 07:44 GMT   |   Update On 2020-03-20 07:44 GMT
கைகளை சோப்பு போட்டு கழுவுதல், சுற்றுப்புறத்தை கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்து, சுய கட்டுப்பாட்டினை கடைப்பிடித்தாலே கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுத்து விடலாம் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம், தமிழகம்-ஆந்திரா எல்லையில் உள்ள பொன்பாடி சோதனைச் சாவடியில் எடுக்கப்பட்டு உள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர் உதயகுமார், பாண்டியராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்கள் ஆந்திராவில் இருந்து வந்த வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

அப்போது அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநிலத்தில் உள்ள 86 சோதனை சாவடிகளில் மனிதர்களின் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, வெளிமாநில வாகனங்களில் கிருமி நாசினிகள் தெளித்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை 48,824 வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் பயணம் செய்த 1,11,009 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். 59,435 பள்ளிகள், 2319 கல்லூரிகள், 52,967 அங்கன்வாடி மையங்கள், திரையரங்குகள், பார்கள், வணிக வளாகங்கள், 15,499 பேருந்துகள் மற்றும் ரெயில்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளது.


தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். கைகளை சோப்பு போட்டு கழுவுதல், சுற்றுப்புறத்தை கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்து, சுய கட்டுப்பாட்டினை கடைப்பிடித்தாலே இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுத்து விடலாம்.

மக்கள் பீதியோ எந்தவித அச்சமும் கொள்ள தேவையில்லை. பொதுமக்கள் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News