செய்திகள்
கொரோனா வைரஸ்

சென்னையில் பள்ளி மாணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?

Published On 2020-03-18 04:21 GMT   |   Update On 2020-03-18 04:21 GMT
சென்னையில் உள்ள தனியார் பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வாட்ஸ்அப் தளத்தில் வைரலாகி வருகிறது.



சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அந்த பள்ளிக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வாட்ஸ்அப் தளத்தில் தகவல் வலம் வருகிறது. தொலைக்காட்சியில் முக்கிய செய்தி என்ற தலைப்புடன் இந்த  தகவல் வைரலாகி வருகிறது.

வைரல் புகைப்படத்தில், ‘முகப்பேர் பகுதியில் உள்ள அமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதால் அப்பள்ளி மார்ச் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது’ என எழுதப்பட்டுள்ளது. தந்தி டி.வி. முக்கிய செய்தியில் இந்த தகவல் வெளியானது போன்று இந்த புகைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 

வைரல் புகைப்படத்தை உற்று நோக்கும் போது அது மென்பொருள் மூலம் மாற்றப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது. தந்தி டி.வி. முக்கிய செய்தி படத்தில் மாணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இணைக்கப்பட்டுள்ளது. புகைப்படத்தில் உள்ள எழுத்துக்களில் கொரோனா பாதிப்பு தகவல் மற்றும் இதர எழுத்துக்களில் வேறுபாடு இருப்பது தெளிவாக தெரிகிறது.


மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள குறியீடு 1 மற்றும் 2 எழுத்துக்களில் வித்தியாசம் இருப்பதை தெளிவாக காணலாம்

அந்த வகையில் சென்னை பள்ளி மாணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கூறும் தகவல்களில் உண்மையில்லை என்பது தெளிவாகிவிட்டது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்ற போதும், தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தொடர் சிகிச்சையில் அவரும் குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சில சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Tags:    

Similar News