செய்திகள்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக செஞ்சி கோட்டை பகுதி நுழைவு வாசல் இழுத்து மூடப்பட்டது.

கொரோனா வைரஸ் எதிரொலி- செஞ்சி கோட்டைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

Published On 2020-03-17 09:51 GMT   |   Update On 2020-03-17 09:51 GMT
கொரோனா வைரஸ் எதிரொலியாக இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை செஞ்சி கோட்டை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செஞ்சி:

கொரோனா வைரஸ் நோயால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. இந்த நோய்க்கு தினமும் 100-க்கு மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய- மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

பொதுமக்கள் கூடும் இடங்களான சினிமா தியேட்டர், சுற்றுலா தலங்கள், மால் போன்றவற்றை மூடும் படி மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து தமிழகத்திலும் கல்வி நிறுவனங்கள், சுற்றுலா தலங்கள், சினிமா தியேட்டர்கள் இன்று முதல் 31-ந்தேதி வரை மூடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக செஞ்சி கோட்டை உள்ளது. இங்கு விழுப்புரம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பஸ், கார்களில் வந்து செல்வது வழக்கம்.

செஞ்சி கோட்டையில் உள்ள ராணி கோட்டை, ராஜா கோட்டை, கல்யாண மகால், ஆயிரங்கால் மண்டபம், யானை குளம், சுற்றுலா பயணிகள் அமருவதற்காக இருப்பிட வசதியும் உள்ளது.

தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள். கொரோனா வைரஸ் எதிரொலியாக இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை செஞ்சி கோட்டை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நுழைவு வாசல் இழுத்து மூடப்பட்டது. இதையறியாமல் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் செஞ்சி கோட்டைக்கு வந்தனர். ஆனால் அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Tags:    

Similar News