செய்திகள்
கஞ்சா கடத்தல்

ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது

Published On 2020-03-14 14:28 GMT   |   Update On 2020-03-14 14:28 GMT
ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை ரெயில் நிலையத்தில் இருந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் கோவை வழியாக பிற மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக தமிழ்நாடு போதைபொருள் குற்றதடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு துணை கமி‌ஷனர் வின்சென்ட், இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கடந்த 2 நாட்களாக கோவை ரெயில் நிலையத்திற்கு வரும் ரெயில்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 2 நாட்களில் மட்டும் 52 கிலோ கஞ்சா ரெயில்களில் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.

மேலும் கஞ்சாவை கடத்தி வந்த தேனி மாவட்டம் மயிலாடும் பாறையை சேர்ந்த சிலம்பரசன்(34), தேவாரத்தை சேர்ந்த பிரபாகரன்(36), சிங்கராஜபுரத்தை சேர்ந்த பாலமுருகன்(24) ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் இவர்கள் 3 பேரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கோவை வழியாக கேரளா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News