செய்திகள்
மோசடி

மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பண மோசடி- வாலிபர் மீது போலீசார் வழக்கு

Published On 2020-03-10 14:25 GMT   |   Update On 2020-03-10 14:25 GMT
குளித்தலை அருகே திருமண ஆசை காட்டி மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பண மோசடி செய்த வாலிபர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கடவூர் பகுதியை சேர்ந்தவர் தேவி (வயது 30, பெயர் மாற்றப்பட்டுள்ளது). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் மயிலாடுதுறையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பணியாற்றி வருகிறார். அந்த காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு உதவிகள் செய்வதற்காக புதுக்கோட்டை மாவட்டம் பிச்சாத்தான்பட்டி ராஜகோபுரம் பாரதிதாசன் தெருவை சேர்ந்த கண்ணன் (31) என்பவர் அடிக்கடி வந்து செல்வதுண்டு. அப்போது தேவிக்கும், கண்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன் மூலம் மாற்றுத்திறனாளியான தேவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கண்ணன் கூறியுள்ளார். கண்ணன் குழந்தைகளுக்கு உதவிகள் செய்து வந்ததால் அதனை தேவியும் நம்பி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். 

இதனை பயன்படுத்தி அவ்வப்போது தேவியிடம் கண்ணன் பணம் வாங்கியுள்ளார். ரூ.75 ஆயிரம் வரை தேவி கொடுத்துள்ளார்.
இதனிடையே தேவியின் பெற்றோர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர். பத்திரிகை அச்சடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு தேவியின் செல்போனுக்கு கண்ணன் ஒரு குறுந்தகவல் அனுப்பினார். அதில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் தேவி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். 

மேலும் கண்ணனுக்கு ஏற்கனவே திருமணமாகி கும்பகோணத்தில் உள்ள அவரது மாமனார் வீட்டில் வசித்து வந்ததும், தேவி மாற்றுத்திறனாளி என்பதால் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பணத்தை பறித்துள்ளதும் தெரியவந்தது. 

இதுகுறித்து பாலவிடுதி போலீசில் தேவி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News