செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை படத்தில் காணலாம்

பூம்பாறை கிராமத்தில், மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

Published On 2020-03-07 16:36 GMT   |   Update On 2020-03-07 16:36 GMT
கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் மதுக்கடையை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கொடைக்கானல்:

கொடைக்கானல் தாலுகா பூம்பாறை கிராமத்தில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையால் பெண்களுக்கும், பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் மதுபோதையில் வரும் நபர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல் இருந்தது. எனவே அந்த மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என பூம்பாறை கிராமத்தை சேர்ந்த பெண்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று பெண்கள் திரண்டு வந்து மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மதுக்கடைக்கு கூடுதல் பூட்டு போட்டனர்.

இதுகுறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், பூம்பாறை ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிரு‌‌ஷ்ணன் மற்றும் போலீசார் சென்று போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், உயர்அதிகாரிகளிடம் பேசி மதுக்கடையை மூட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்களிடம் உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக பூம்பாறை கிராமத்தில் பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News