செய்திகள்
கொள்ளை நடந்த வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

ராஜாக்கமங்கலம் அருகே போலீஸ்காரர் வீட்டில் 7 பவுன் நகை கொள்ளை

Published On 2020-02-28 04:40 GMT   |   Update On 2020-02-28 04:40 GMT
ராஜாக்கமங்கலம் அருகே போலீஸ்காரர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 7 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் தெற்கூரை சேர்ந்தவர் முருகன் (வயது 37). இவர் ரெயில்வே பாதுகாப்பு படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகன் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி ஆண்டு விழா நடந்தது. விழாவில் கலந்து கொள்வதற்காக முருகன் தனது குடும்பத்துடன் பள்ளிக்கு சென்றிருந்தார்.

ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் முடிந்து இரவு 10.30 மணி அளவில் வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்த பீரோவும் திறந்தநிலையில் இருந்தது. பொருட்கள் அங்கும், இங்குமாக சிதறிக் கிடந்தது.

பீரோவில் இருந்த 7 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ராஜாக்கமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கொள்ளை சம்பவம் குறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முருகன் பள்ளி ஆண்டு விழாவிற்கு சென்று உள்ளார் என்பதை நோட்டமிட்டே கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். போலீஸ்காரர் வீட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News