செய்திகள்
மதுரை புனித வளனார் தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் மக்களுக்கு சாம்பல் பூசி ஆசி வழங்கப்பட்டது.

இன்று சாம்பல் புதன்கிழமை- கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

Published On 2020-02-26 11:27 GMT   |   Update On 2020-02-26 11:27 GMT
மதுரையில் இன்று சாம்பல் புதனையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை:

இயேசு கிறிஸ்து 40 நாட்கள் தனிமையில் சென்று உபவாசம் இருந்த காலத்தை தவக்காலம் என்று கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள்.

இந்த காலத்தை ‘லெந்து’ நாட்கள் என்று கூறுவதும் உண்டு. தவக்காலம் தொடங்கும் நாள் தான் சாம்பல் புதன்கிழமையாகும். அந்த வகையில் சாம்பல் புதனையொட்டி இன்று அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் காலை ஆராதனையின் போது கடந்த ஆண்டு பயன்படுத்திய குருத்தோலையை எரித்து அதன் சாம்பலை மக்கள் நெற்றியில் பங்கு தந்தை சிலுவை அடையாளம் இடும் நிகழ்ச்சி நடந்தது.

கிறிஸ்தவர்கள் அனைவரும் சாம்பலால் ஆன சிலுவை அடையாளத்தை நெற்றியில் பூசிக் கொண்டனர். மதுரை, கீழவாசல், புதூர், பாஸ்டின் நகர், அண்ணா நகர், ஞானஒளிவு புரம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

தென்னிந்திய திருச்சபை என்னும் சி.எஸ்.ஐ. ஆலயங்கள் இ.சி.ஐ. ஆலயங்கள், பெந்த கோஸ்து ஆலயங்களில் சாம்பல் புதன்கிழமை சிறப்பு வழிபாடு மாலையில் நடைபெறுகிறது. மதுரை நரிமேடு பகுதியில் உள்ள கதீட்ரல் பேராலயம் மற்றும் கீழவாசல், தெற்குவாசல் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் ஆராதனை நடக்கிறது. கிறிஸ்தவர்கள் இந்த தவக்காலத்தில் மாமிச உணவுகளை தவிர்த்து உபவாசம் இருப்பது வழக்கம்.

இந்த காலங்களில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமையும் மாலையில் சிறப்பு வழிபாடு ஆலயங்களில் நடைபெறும் அனைத்து சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் கன்வென்‌ஷன் கூட்டமும் நடத்தப்படும்.

Tags:    

Similar News