செய்திகள்
பணம் கொள்ளை

விவசாயிடம் நூதன முறையில் ஏ.டி.எம்.மில் ரூ.20 ஆயிரம் கொள்ளை

Published On 2020-02-26 09:35 GMT   |   Update On 2020-02-26 09:35 GMT
ஜோலார்பேட்டை அருகே விவசாயிடம் நூதன முறையில் ஏ.டி.எம்.மில் ரூ.20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை சந்தை கோடியூர் நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் மலர்வாணன்(59) விவசாயி. இவர் கோடியூரில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்தார். ஆனால் அவருக்கு ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்க தெரியாது.

இதனால் அருகில் இருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து ரூ 500 எடுத்து தரும்படி கேட்டார்.

அந்த நபரும் அவரிடம் ஏ.டி.எம். கார்டை பெற்றுக்கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.500 எடுத்து கொடுத்து விட்டார்.

பின்னர் மலர்வாணன் ரசீது எடுத்துக் கொடுக்கும்படி கேட்டார். ஆனால் அந்த நபர் உங்கள் ஏ.டி.எம். கார்டுக்கு ரசீது வரவில்லை என கூறி கார்டை மலர்வாணனிடம் கொடுத்து விட்டார்.

இந்நிலையில் மலர்வாணன் நேற்று முன்தினம் மீண்டும் அதே ஏ.டி.எம். சென்று மற்றொரு நபரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரசீது எடுத்து தரும்படி கேட்டார்.

அப்போது அவர் கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரத்து 500 எடுக்கப்பட்டது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மலர்வாணன் இது குறித்து ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் நூதன முறையில் விவசாயி கணக்கில் ரூ 20 ஆயிரம் கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று போலீசார் ஏடிஎம் மையத்தில் இருந்து பதிவான வீடியோவை வெளியிட்டனர். அதில் கட்டம் போட்ட முழுக்கை சட்டை அணிந்த வாலிபர் மலர்வாணனிடம் நூதன மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னர் போலீசார் அந்த படத்தை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News