செய்திகள்
பணம் பறிப்பு

குலசேகரத்தில் முதியவரிடம் சில்லரை கேட்பதுபோல் பணம் பறிப்பு

Published On 2020-02-17 11:27 GMT   |   Update On 2020-02-17 11:27 GMT
குலசேகரத்தில் முதியவரிடம் சில்லரை கேட்பதுபோல் பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்:

குலசேகரம் ஈஞ்சவிளை பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 72). இவருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

முதியவர் மணி தனக்கு வந்த முதியவர் உதவித் தொகையை பெறுவதற்காக செருப்பாலூர் பகுதியில் உள்ள ஒரு பாங்கிற்கு சென்றார். அங்கு அவர் முதியவர் உதவித் தொகையை வாங்கிக் கொண்டு வீடு திரும்புவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் முதியவர் மணியிடம் ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை இருக்கிறதா? என கேட்டார். உடனே முதியவர் தான் வைத்திருத்திருந்த முதியவர் உதவித் தொகை பணத்தை எடுத்து எண்ணிக் கொண்டிருந்தார்.

திடீர் என மோட்டார் சைக்கிளின் வந்த வாலிபர் கண் இமைக்கும் நேரத்தில் முதியவரிடம் இருந்து பணத்தை பறித்தார். இதில் ரூ.800 கொள்ளையன் கையில் சிக்கியது. மின்னல் வேகத்தில் கையில் கிடைத்த பணத்துடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றான்.

பணத்தை பறிகொடுத்த முதியவர் கூச்சலிட்டு அலறினார். அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். மேலும் சம்பவம் குறித்து குலசேகரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மைலப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர்.

முதியவர் மணி கூறிய அடையாளங்களை கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News