செய்திகள்
கோப்பு படம்

தாராபுரத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 60 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2020-02-13 12:06 GMT   |   Update On 2020-02-13 12:06 GMT
தாராபுரத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 60 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாராபுரம்:

தாராபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் சந்திர சேகர். இவர் தனது வீட்டுடன் இணைந்து மொத்த வியாபார கடை நடத்தி வருகிறார்.இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து இருப்பதாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகைக்கு தகவல் கிடைத்தது.

உடனே அவர் உணவு பாதுகாப்பு அலுவலர் அண்ட்ரூஸ் மற்றும் அலுவலர்களுடன் தாராபுரம் அண்ணா நகரில் உள்ள சந்திரசேகர் வீட்டிற்கு சென்றனர்.

60 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

அங்குள்ள ஒரு அறையை சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர். மொத்தம் 60 கிலோ புகையிலை பொருட்கள் அங்கு இருந்தது.

அதனை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 80 ஆயிரம் ஆகும். பின்னர் அறைக்கு சீல் வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர்.

தாராபுரம் பகுதியில் ஏராளமான மில்கள் உள்ளது. அங்கு வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் கடை காரர்கள் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்ததாக 47 கடைக்காரர்கள் சிக்கி உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

தாராபுரத்தில் மட்டும் ஒரு கடைக்காரருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து பிடிபட்டால் இரு முறை அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். 3-வது முறை சிக்கினால் கடையின் லைசென்சு ரத்து செய்யப்படும். ஜெயில் தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News