செய்திகள்
கைது

சங்கரன்கோவில் அருகே கட்சி பிரமுகரை தாக்கிய 3 பேர் கைது

Published On 2020-02-12 12:48 GMT   |   Update On 2020-02-12 13:00 GMT
சங்கரன்கோவில் அருகே மணல் கடத்தி வந்ததை போலீசாருக்கு தகவல் சொன்னதால் கட்சி பிரமுகரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள கீழமரத்தோணியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 32). அரசியல் கட்சி பிரமுகரான இவர் நேற்று இரவு குருவிகுளத்தில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பினார். அப்போது சங்கரன்கோவில் அருகே உள்ள உமையதலைவன்பட்டியை சேர்ந்த சீனிபாண்டி, காளிராஜ், முப்புடாதி மற்றும் வைரமுத்து ஆகியோர் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும் இதனை தடுக்க வந்த அவரது உறவினர்களையும் 4 பேரும் சேர்ந்து அடித்து உதைத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுகுறித்து மணிகண்டன் கரிவலம்வந்த நல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய காளிராஜ், முப்புடாதி, வைரமுத்து ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் 4 பேரும் லாரியில் மணல் கடத்தி சென்றதை மணிகண்டன் பார்த்ததாகவும், அவர் உடனே இதுகுறித்து போலீசில் தகவல் கொடுத்து தங்களை மாட்டிவிட்டதாகவும் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் மணிகண்டனையும், அவரது உறவினரையும் தாக்கியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தப்பியோடிய சீனி பாண்டியை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News