செய்திகள்
சென்னை ஐகோர்ட்

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவருக்கு ஜாமீன்- ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2020-02-06 09:31 GMT   |   Update On 2020-02-06 09:31 GMT
கோவை மாநகராட்சி கொண்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சென்னை:

கோவை, தெற்கு உக்கடத்தை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவர், கோவை மாநகராட்சி கொண்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வந்தார். இதற்காக அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி சார்பில் சூரிய மின்சக்தி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, ‘சூரிய மின் சக்தி திட்டத்தினால் பொது மக்களுக்கு தோல்நோய் ஏற்படும். சிறுநீரகத்தில் பிரச்சனை வரும். பல நோய்கள் மக்களிடம் வரும்’ என்று வாட்ஸ்அப்பில் கருத்து தெரிவித்தார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த மாதம் 10-ந்தேதி ஜாகீர் உசேனை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.சே‌ஷசாயி முன்பு கடந்த ஜனவரி 30-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கருத்து சுதந்திரம் உள்ளது என்பதற்காக வாய்க்கு வந்ததை எல்லாம் சமூக வலைதளங்களில் பேசுவதா?

சூரிய மின்சக்தியினால் தோல் வியாதி வரும் என்று மனுதாரர் வாட்ஸ்அப்பில் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் என்ன படித்துள்ளார்? அவரது கல்வித்தகுதி என்ன? சூரிய மின்சக்தி துறையில் அவர் நிபுணரா? அறிவியல் ரீதியாக இதுகுறித்து ஏதாவது ஆராய்ச்சிகளை மேற்கொண்டாரா?

ஐந்தாம் வகுப்புக்கூட படிக்காதவர்கள் ஐகோர்ட்டின் தீர்ப்புகளை எல்லாம் கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கி விட்டனர்’ என்று கருத்து தெரிவித்தார்.

பின்னர், மனுதாரர் எந்த சமூக வலைதளத்தில் ஆதாரமற்ற தகவல் பரப்பினாரோ, அதே சமூக வலைதளத்தில் தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்தும், அது ஆதாரமற்ற கருத்து என்றும் பதிவு வெளியிட சம்மதித்தால், ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்’ என்று நீதிபதி கூறினார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட தயாராக உள்ளதாக அவரது வக்கீல் கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News