செய்திகள்
கோப்பு படம்

சப்-இன்ஸ்பெக்டர் மகளுக்கு நர்சு வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி - 2 பேர் மீது வழக்கு

Published On 2020-02-04 09:30 GMT   |   Update On 2020-02-04 09:30 GMT
புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சப்-இன்ஸ்பெக்டர் மகளுக்கு நர்சு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:

புதுவை வைத்திக்குப்பம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் பாஸ்கரன். ஓய்வு பெற்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர்.

இவரது மகள் வல்லத்தரசி (வயது 30). இவர் எம்.எஸ்.சி. நர்சிங் முடித்து இருந்தார். ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்க்க வேண்டும் என்று விரும்பினார்.

ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஆர்ட்டிஸ்டாக வேலை பார்க்கும் முருகசாமி என்பவர் பாஸ்கரின் நண்பர் ஆவார்.

வல்லத்தரசிக்கு ஜிப்மரில் நர்சு வேலை வாங்கி தருவதாக முருகசாமி உறுதி அளித்தார்.

ஜிப்மரில் வேலை பார்க்கும் மற்றொரு ஊழியர் ரவிசேகர் இதற்கான ஏற்பாடுகளை செய்து தருவார் என்றும் கூறினார். இதனால் ரவிசேகரை சந்திக்க வருமாறு வல்லத்தரசியிடம் கூறினார்கள்.

கடந்த 1.9.2016 அன்று ரவிசேகரை சந்திக்க வல்லத்தரசி, தனது தந்தை பாஸ்கரன், உறவினர் நாராயணன் ஆகியோருடன் சென்றார்.

ரவிசேகரின் வீடு மூல குளத்தில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் உள்ளது. அங்கு 3 பேரும் சென்றார்கள். அப்போது ரவிசேகரின் மனைவி சியாமளா, முருகசாமி ஆகியோரும் அங்கு இருந்தனர்.

ரூ.8 லட்சம் பணம் கொடுத்தால் நர்சு வேலை வாங்கி விடலாம் என கூறினார்கள். அதற்கு ரூ. 4 லட்சம் உடனடியாக தருவதாக வல்லத்தரசி தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

அதன்படி வல்லத்தரசி ரூ.4 லட்சம் பணத்தை ரவிசேகரின் மனைவி சியாமளா வங்கி கணக்குக்கு அனுப்பினார்.

ஆனால், அவர்கள் கொடுத்த வாக்குறுதிப்படி வேலைவாங்கி கொடுக்கவில்லை.

இதற்கிடையே ரவி சேகர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். அவர் மடுகரையில் வசிப்பது தெரிய வந்தது.

எனவே, அங்கு சென்று வல்லத்தரசி பணத்தை கேட்ட போது, பணத்தை தர முடியாது என்று கூறிவிட்டனர்.

இதையடுத்து வல்லத்தரசி ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார்.அதன் அடிப்படையில் ரவிசேகர், சியாமளா, முருகசாமி 3 பேர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களை தேடி வருகிறார்கள்.

2016-ம் ஆண்டு மதுரையை சேர்ந்த ஒரு மாணவருக்கு ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக ரூ.14 லட்சத்தை மோசடி செய்ததாக ரவிசேகர் மீது ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News