செய்திகள்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஜெயலலிதா உருவ படத்திற்கு வழிபாடு செய்து நூதன போராட்டம் நடத்திய விவசாயிகள்.

ஜெயலலிதா உருவ படத்திற்கு வழிபாடு செய்து விவசாயிகள் நூதன போராட்டம்

Published On 2020-02-03 10:46 GMT   |   Update On 2020-02-03 10:46 GMT
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஜெயலலிதா உருவ படத்திற்கு வழிபாடு செய்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளிக்க வந்தனர்.

அவர்கள் கலெக்டர் அலுவலத்தில் அமர்ந்து இருந்தனர். அங்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவ படம் வைத்து இருந்தனர். அதற்கு முன் தேங்காய், இளநீர், வெங்காயம், கீரை வகைகள், நவதானியம், காய்கறி உள்ளிட்டவைகளை படையல் செய்து பூஜை செய்தனர்.

விவசாயிகளின் காவல் தெய்வமாக இருந்தவர் ஜெயலலிதா. அவர் மக்களுக்காகவே திட்டங்கள். திட்டங்களுக்காக மக்கள் அல்ல என்ற கொள்கை முடிவு எடுத்து கெயில் என்ற நாசகார திட்டத்தை எதிர்த்து அந்த நிறுவனம் விவசாய நிலம் வழியாக குழாய் பதிப்பதை எதிர்த்தார்.

தற்போது விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதிக்க மீண்டும் முயற்சி நடைபெற்று வருகிறது. வருவாய் துறை, காவல் துறை, பாரத் பெட்ரோலியம் துறையினர் ஒன்று சேர்ந்து விவசாயிகளை அச்சுறுத்தி வருகின்றனர்.

பாரத் பெட்ரோல் நிறுவனம் விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதிப்பதை எதிர்த்து ஜெயலலிதா படத்திற்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

விவசாயிகள் தென்னை மரத்துக்கு வைக்கும் மருந்து, அரளி விதை மற்றும் வி‌ஷ பாட்டில் ஆகியவற்றையும் கொண்டு வந்து இருந்தனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதித்தால் நாங்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என்றனர்.
Tags:    

Similar News