செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்- கோவை அரசு ஆஸ்பத்திரியில் 25 படுக்கையுடன் தனி வார்டு

Published On 2020-01-29 10:14 GMT   |   Update On 2020-01-29 10:14 GMT
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
கோவை:

கொரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் சீனாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு கோவையை சேர்ந்த 4 பேர், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பேர், திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர், சென்னையை சேர்ந்த ஒருவர் என 8 பேர் வந்தனர். அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 8 பேரும் பொது இடங்களுக்கு செல்ல சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

இதுகுறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அசோகன் கூறுகையில், சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் இறந்துள்ளனர். இன்னும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இந்த வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இருந்தாலும் அவர்கள் 8 பேரையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் உத்தரவுப்படி கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வார்டில் 25 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருப்பார்கள் என்றார்.

Tags:    

Similar News