செய்திகள்
மாயமான தங்கம்

நெல்லைக்கு ரெயிலில் வந்த இளம்பெண் திடீர் மாயம் கடத்தப்பட்டாரா?

Published On 2020-01-28 12:13 GMT   |   Update On 2020-01-28 12:17 GMT
நெல்லைக்கு அந்தியோதா ரெயிலில் வந்த இளம்பெண் திடீரென மாயமானர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள நரையப்பபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பூசைக்கனி. இவர்களுக்கு 3 மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். முருகேசன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது 2-வது மகள் தங்கம் (வயது25). இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தஞ்சாவூரை சேர்ந்த கார்த்திகேயன் (30) என்பவருடன் திருமணம் நடந்தது. கார்த்திகேயன் தஞ்சாவூரில் ஏஜென்ஸி ஒன்று நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சொந்த ஊருக்குவர நேற்று தங்கம் மட்டும் தனியாக சென்னை- கன்னியாகுமரி அந்தியோதா ரெயில் மூலமாக நெல்லைக்கு வந்தார். அப்போது தங்கத்திற்கு அவரது தாய் போன் செய்துள்ளார். அவரிடம் பேசிய தங்கம், தான் மதுரை வந்து விட்டதாகவும், நெல்லை வந்ததும் தகவல் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து வெகுநேர மாகியும் மகளிடம் இருந்து போன் வராததால் பூசைக்கனி அவருக்கு போன் செய்துள்ளார். அப்போது அவரது போன் ‘சுவிட்ச் ஆப்’ என வந்துள்ளது. இதனால் பதட்டம் அடைந்த பூசைக்கனி, தனது மகன் திருமலையிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். உடனே திருமலை நெல்லை ரெயில் நிலையத்திற்கு வந்து ரெயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

ஆனால் போலீசார் புகார் மனுவை ஏற்க மறுத்துள்ளனர். மேலும் அவர்கள் நெல்லை நோக்கி வந்த தங்கம், ஒரு வேளை நெல்லையில் இறங்கி அதன்பின் செங்கோட்டை- தென்காசி ரெயிலில் ஏறி செல்லும் போது காணாமல் போயிருக்கலாம் என கூறி தென்காசி ரெயில்வே போலீசாரிடம் புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்து தென்காசி சென்ற திருமலை ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் தென்காசி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தங்கத்தை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாயமான தங்கம் தனியாக வந்துள்ளார். மேலும் அவர் அதிகமான நகைகள் அணிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மர்ம நபர்கள் யாரேனும் நகைக்காக அவரை கடத்தி சென்றனரா? அவராகவே வேறு எங்கும் சென்றாரா? என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News