செய்திகள்
வைகோ

ரெயில்வே துறையை தனியார்மயம் ஆக்க கூடாது- வைகோ அறிக்கை

Published On 2020-01-21 08:40 GMT   |   Update On 2020-01-21 11:44 GMT
மத்திய அரசு ரெயில்வே துறையை தனியார் மயம் ஆக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பா.ஜனதா கட்சி அரசு, கடந்த ஆண்டு இரண்டாவது முறையாகப் பொறுப்பு ஏற்றவுடன், உடனடியாக நூறு நாள் செயல் திட்டம் ஒன்றை அறிவித்தது. அதில் முதன்மையாக, ரெயில்வே துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கேற்பு இடம் பெற்று இருந்தது.

இதுகுறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, கடந்த 2019 ஜூலை 12-ம் தேதி ரெயில்வேத்துறை அமைச்சர் பியூஸ்கோயல் பதில் அளிக்கும்போது, “ரெயில்வேத்துறை தனியார் மயம் ஆக்கப்படும் என்ற கேள்விக்கே இடம் இல்லை; ரெயில்வேத்துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மட்டுமே தனியாரின் பங்கு கோரப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்தார்.

ஆனால், அதற்கு மாறாக, கடந்த ஆண்டு 2019 செப்டம்பர் 23-ம் தேதி, மத்திய அரசு சார்பில் இந்திய ரெயில்வே வாரியம், 6 மண்டலங்களின் தலைமை மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், 150 வழித்தடங்களைக் குறிப்பிட்டு, அவற்றில் உடனடியாக தனியார் ரெயில்களை இயக்குவதற்கு எந்தெந்த வழித்தடங்களைத் தேர்வு செய்யலாம் என கருத்து கேட்டு இருந்தது.



இதன் தொடர்ச்சியாக, தற்போது ரெயில்வே துறை சீரமைப்பு தொடர்பாக ‘நிதி ஆயோக்’ வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. ரூ. 22 ஆயிரம் கோடி முதலீட்டில் 100 நகரங்களுக்கு இடையே 150 தனியார் ரெயில்களை இயக்குவதற்கான திட்டத்தைச் செயல்படுத்த முடிவு எடுத்து இருப்பதாக ‘நிதி ஆயோக்’ கூறி உள்ளது.

சென்னையில் இருந்து ஜோத்பூர் வாரம் ஒருமுறை, மும்பை பன்வல் வாரம் இருமுறை, தில்லி ஓக்லா, கொல்கொத்தா ஹவுரா, செகந்திராபாத் மற்றும் கோவை, சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, பெங்களூரு என தமிழகத்தில் மட்டும் மொத்தம் 11 தனியார் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெயில்வே துறை முழுமையும் தனியார் மயம் ஆக்கப்படும்போது, அரசு மானியம் படிப்படியாக ஒழிக்கப்படும். இதனால் பயணிகள் கட்டணம் பல மடங்கு உயரும். ரெயில் பயணிகள் பெரும் பாதிப்பு அடைவார்கள்.

குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு சேவை அளித்து வரும் ரெயில்வே துறையைச் சீர்குலைத்தால், ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் சீர்குலையும். இந்திய ரெயில்வேத் துறையில், 14 லட்சத்திற்கு மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

தனியார் மயமானால், அந்தத் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும். எனவே, மத்திய அரசு, ரெயில்வே துறையைத் தனியார் மயம் ஆக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Tags:    

Similar News