செய்திகள்
போலீசார் விசாரணை

நாகர்கோவிலில் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? - போலீசார் விசாரணை

Published On 2020-01-11 10:22 GMT   |   Update On 2020-01-11 10:22 GMT
நாகர்கோவிலில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:

நாகர்கோவிலை அடுத்த வலம்புரிவிளையில் உரக்கிடங்கு உள்ளது. உரக்கிடங்கை அடுத்து ராயல் கார்டன் பகுதி உள்ளது. இங்கு சிறுவர்கள், இளைஞர்கள் விளையாடும் மைதானம் உள்ளது.

இரவு நேரத்திலும் அந்த பகுதி வாலிபர்கள் மற்றும் சிறுவர்கள் மைதானத்திற்கு சென்று பேசிக்கொண்டிருப்பது வழக்கம். நேற்றிரவு அப்பகுதி வாலிபர்கள் சிலர் அந்த மைதானத்திற்கு சென்றனர். அங்கு புதர் மண்டிய பகுதிக்கு சென்றபோது அங்கு வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதை கண்டனர்.

பிணத்தை கண்டு அதிர்ந்து போன அவர்கள் இதுபற்றி கோட்டார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பிணமாக கிடந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும். அந்த வாலிபரின் பின்பக்க தலை, இடது கண் ஆகிய பகுதிகளில் வெட்டு காயங்கள் காணப்பட்டன. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

மைதானத்தில் பிணமாக கிடந்த வாலிபரை யாரோ கொலை செய்திருப்பது தெரியவந்தது. கல்லால் அடித்தும், கட்டையால் தாக்கியும் அவர் கொல்லப்பட்டு உள்ளார். இதையடுத்து வடிவீஸ்வரம் தெற்கு கிராம நிர்வாக அதிகாரி நாகலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் வாலிபர் பிணம் கிடந்த பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி வாலிபர்கள் அமர்ந்து மது குடிப்பது வழக்கம் என்பது தெரியவந்தது.

இவ்வாறு மது குடித்த வாலிபர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதற்காக இறந்து கிடந்தவர் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். அவர் யார்? என்பது தெரிந்தால், கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்து விடலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே வாலிபர் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்ற விபரமும் தெரியவரும். இதற்கான நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News