செய்திகள்
கோப்பு படம்

திருப்பூரில் ரூ.1 லட்சம் கள்ளநோட்டு சிக்கியது

Published On 2020-01-06 10:56 GMT   |   Update On 2020-01-06 10:56 GMT
திருப்பூரில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர்:

திருப்பூர் திருநீலகண்ட வீதியில் உள்ள மோகன் என்பவரது மொட்டைமாடியில் கள்ள நோட்டுக்கள் இருப்பதாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு போனில் ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் முனியம்மாள் தலைமையிலான போலீசார் மோகன் வீட்டுக்கு சென்றனர். மொட்டைமாடியில் அங்குல அங்குலமாக தேடினர். அப்போது ஒரு பெயிண்ட் டப்பாவில் டர்பன் ஆயில் இருந்தது.

அதனை சோதனை செய்தபோது அதில் 2000, 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதில் இருந்து எடுத்தபோது நோட்டுக்கள் கிழிந்தன. இதனையடுத்து ரூபாய் நோட்டுகளை பத்திரமாக மீட்டனர். மொத்தம் ரூ.1 லட்சம் இருந்தது.

கள்ளநோட்டு அச்சடிக்கப்பட்டதா? அல்லது ஜெராக்ஸ் எடுக்கப்பட்டதா? என்பது உடனே தெரியவில்லை. டர்பன் ஆயிலில் கள்ளநோட்டுக்களை ஊற வைத்ததால் பயன்படுத்திய ரூபாய் நோட்டுக்கள் போல் தெரிந்தது. இந்த நூதனமுறையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றிருப்பது தெரியவந்தது.

வீட்டு உரிமையாளரிடம் இது குறித்து கேட்டபோது இதற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.

இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News