செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு

Published On 2020-01-04 06:50 GMT   |   Update On 2020-01-04 06:50 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.30, 656-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.

கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்தது. ஒரு பவுன் விலை ரூ. 30 ஆயிரத்து 104 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது.

பின்னர் சற்று குறையத் தொடங்கியது. 10 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ. 1,500 வரை குறைந்ததால் பெண்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

அதன்பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக காணப்பட்டது. புத்தாண்டு பிறந்த உடன் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.

நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 3,815-க்கும், பவுனுக்கு ரூ. 640 உயர்ந்து ஒரு பவுன் ரூ. 30 ஆயிரத்து 520-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 17 அதிகரித்து ரூ. 3,832 ஆக உயர்ந்தது. பவுனுக்கு ரூ. 136 அதிகரித்து ஒரு பவுன் ரூ. 30 ஆயிரத்து 656 ஆக உயர்ந்தது.

அதே நேரம் வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ. 51-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 400 குறைந்து ரூ. 51 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.

ஈரான் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல் காரணமாக நேற்று சர்வதேச அளவில் கச்சா எண்ணை மற்றும் தங்கம் விலை உயர்ந்தது.

இந்த நிலையில் இன்றும் அமெரிக்க ராணுவம் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியதால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News