செய்திகள்
சென்னை ஐகோர்ட்

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தாமதம் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Published On 2020-01-02 17:45 GMT   |   Update On 2020-01-02 17:45 GMT
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கிறது என்ற அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
சென்னை:

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து புகார் மனு அளித்தார். 

அப்போது, உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நோக்கி திமுக கூட்டணி முந்திக்கொண்டிருப்பதாகவும், ஆனால், திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்துவதற்காக அதிமுக, போலீஸ் மற்றும் அதிகாரிகள் சதி செய்வதாகவும் கூறினார். அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்காதததால், நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் கூறினார்.
 
அதன்படி, திமுக சார்பில் இன்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடப்பதாக திமுக வழக்கறிஞர் தெரிவித்தார். எடப்பாடி, சங்ககிரி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதாக கூறி மனு அளிக்கப்பட்டது. 

இந்த வழக்கை இன்று மாலையே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால், அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து, வழக்கு விசாரணை இரவு வரை நடைபெற்றது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கிறது என்ற அறிக்கையை நாளை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
Tags:    

Similar News