செய்திகள்
ஸ்ரீபெரும்புதூரில் லாரி மோதிய விபத்தில் நொறுங்கிய கார்

சென்னை-ஸ்ரீபெரும்புதூரில் புத்தாண்டு தின விபத்தில் 6 பேர் பலி

Published On 2020-01-01 07:45 GMT   |   Update On 2020-01-01 07:45 GMT
புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் நடைபெற்ற நேற்றும், இன்று காலையிலும் வெவ்வேறு விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை:

புளியந்தோப்பு பழைய போகிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (40) ஐகோர்ட்டில் வக்கீலான இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

புழல் ஜெயில் எதிரே, இவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த லாரி மோதியது. இதில் உடல் நசுங்கிய வக்கீல் ராமலிங்கம் உயிரிழந்தார்.

செங்குன்றம் எம்.ஏ. நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (31). தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்யும் இவர் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

கதிர்வேடு சிக்னலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இவர் உயிரிழந்தார். இந்த இரண்டு விபத்துக்கள் குறித்தும் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எண்ணூர் குப்பம் 5-வது தெருவை சேர்ந்தவர் சுந்தர் (48). இவர் நேற்று 1.40 மணி அளவில் தாளாங்குப்பம் கடற்கரையை யொட்டிய சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே புல்லட் மோதியதில் சுந்தர் பலியானார். புல்லட்டை ஓட்டி வந்த ஆகாஷ் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒடிசாவை சேர்ந்த முகமது மோதின் (45) பூந்தமல்லி அருகே உள்ள செந்நீர் குப்பத்தில் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். சைக்கிளில் சென்ற இவர் மீது நேற்று இரவு ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் நடுதெரு பகுதியை சேர்ந்தவர்கள் விக்னேஷ்ஷா (24) சங்கர் ஷா (26), இருவரும் காஞ்சிபுரத்தில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாடினர். பின்னர் அதிகாலை 3 மணியளவில் சென்னையில் புத்தாண்டை கொண்டாட காரில் 6 பேர் சென்னைக்கு புறப்பட்டனர்.

பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது இருங்காட்டு கோட்டையில் லாரி மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் ஷா, சங்கர் ஷா ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

விபத்து பற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் விசாரணை நடத்தி வருகிறார்.



Tags:    

Similar News