செய்திகள்
பொங்கல் பரிசு

1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு 9-ந் தேதி முதல் வழங்கப்படும்- தமிழக அரசு அறிவிப்பு

Published On 2019-12-30 20:00 GMT   |   Update On 2019-12-30 20:00 GMT
1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பை 9-ந் தேதி முதல் 12-ந் தேதிக்குள் வழங்கி முடிக்க உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் 1 கிலோ பச்சரிசி மற்றும் 1 கிலோ சர்க்கரையுடன் கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் போன்றவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

என்றாலும் உள்ளாட்சி தேர்தல் காரணமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந் தேதி நடைபெற உள்ளது. எனவே, 1,000 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது.

இது குறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ரா சவான் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பை வருகிற 9-ந் தேதி முதல் தொடங்கி 12-ந் தேதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பும், 1,000 ரூபாயும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும். 1,000 ரூபாயை இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக உறையில் வைக்காமல் வெளிப்படையாக வழங்க வேண்டும்.

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்கத்தொகை பெறாத விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13-ந் தேதி அன்று பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகையினை வழங்கி இப்பணியை முழுமையாக முடிக்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1,000 ரூபாயை பெறும் ஆர்வத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாயவிலை கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்கும் வகையில் தெரு வாரியாக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கடைகள் ஒரே இடத்தில் இயங்கினால் கூடுதலாக மேசை, நாற்காலிகள் அமைத்து, கூடுதல் பணியாளர்களையும் பணியமர்த்தி, கூட்டத்தை ஒழுங்குபடுத்த தேவைக்கேற்ப போலீசாரின் உதவியையும் பெற்று பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News