செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை

சரியும் பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம்

Published On 2019-12-27 07:40 GMT   |   Update On 2019-12-27 07:40 GMT
முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2-ம் போக நெல் பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கூடலூர்:

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரைக் கொண்டு கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், மார்க்கையன் கோட்டை, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் முதல்போக பாசனத்துக்காக ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் ஆகஸ்ட்டு 29-ந் தேதிதான் தண்ணீர் திறக்கப்பட்டது.

தற்போது பெரும்பாலான இடங்களில் அறுவடை பணிகள் முடிந்துள்ளன. ஒரு சில வயல்களில் கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராகியுள்ளன.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்த கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்போது அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் 2-ம் போகத்துக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஒரு சில விவசாயிகள் நாற்றங்கால் அமைத்து பராமரித்து வருகின்றனர். ஆனால் வேளாண் துறை அதிகாரிகள் தண்ணீர் திறப்பு சாத்தியமில்லை என்பதால் பொறுமையாக நாற்று நடும் பணியை தொடங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 125.70 அடியாக உள்ளது. வரத்து 382 கன அடி. திறப்பு 1000 கன அடி. இருப்பு 3769 மில்லியன் கன அடி. வைகை அணை நீர் மட்டம் 62.88 அடி. வரத்து 819 கன அடி. திறப்பு 3154 கன அடி. இருப்பு 4175 மில்லியன் கன அடி.

Tags:    

Similar News