செய்திகள்
தீ விபத்து

சாத்தான்குளத்தில் 2 கடைகளில் திடீர் தீ விபத்து- பொருட்கள் சேதம்

Published On 2019-12-23 11:41 GMT   |   Update On 2019-12-23 11:41 GMT
சாத்தான்குளத்தில் இன்று அதிகாலை 2 கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள சிறைப்பூரை சேர்ந்தவர் அனீஸ் (வயது45). இவர் சாத்தான்குளம் வாசகர் சாலை பஜாரில் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையையொட்டி சாத்தான் குளத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென அந்த 2 கடைகளிலும் தீப்பற்றி எரிந்தது. உடனே அந்த வழியாக சென்றவர்கள் கடையின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பத்மசேகர் தலைமையிலான வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. ஆனால் பழக்கடையில் இருந்த 2 பிரிட்ஜ்கள் மற்றும் பழங்கள் எரிந்து சேதமானது.

இதேபோல் அருகில் இருந்த எலக்ட்ரிக் கடையில் வயர்கள், பைப்கள் உள்ளிட்ட பொருட்களும் எரிந்து நாசமானது. இந்த இரண்டு கடைகளிலும் எரிந்து சேதமான பொருட்களின் மதிப்பு ரூ.1.20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் எலக்ட்ரிக் கடையின் அருகே இருந்த மொபைல் கடை, கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவைகள் இந்த தீ விபத்தில் இருந்து தப்பின. இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News