செய்திகள்
ஜெ.அன்பழகன்

தி.மு.க. பேரணியை தடுத்தால் மறியல்- ஜெ.அன்பழகன் தகவல்

Published On 2019-12-22 10:04 GMT   |   Update On 2019-12-22 10:04 GMT
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நடக்கும் தி.மு.க. பேரணியை தடுத்தால் மறியல் செய்யப்படும் என்று ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தி.மு.க. பேரணிக்கு அனுமதி கேட்டு பகுதி செயலாளர் மதன்மோகன் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். இதற்கு சில விளக்கங்களை தருமாறு போலீசார் பதில் கடிதம் அனுப்பி உள்ளனர்.

அதில் பேரணியில் எவ்வளவு பேர் பங்கேற்பார்கள்? பேரணி அமைதியாக நடைபெறுமா? வாகனங்கள் பேரணியில் வருமா? அனைவரும் நடந்து செல்வார்களா? புதுப்பேட்டை கூவம்கரையோரம் சென்றால் பேரணி ஸ்தம்பிக்குமே என்று கேட்டிருந்தனர்.

இதற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் கொடுத்துள்ள பதிலில், தி.மு.க. பேரணி அமைதியாகத்தான் நடைபெறும். இதுவரை நடைபெற்ற பேரணியில் வன்முறை எதுவும் நிகழ்ந்தது கிடையாது.

பேரணியில் வாகனங்களில் செல்லாமல் நடந்து செல்வதாகவும், போலீசார் அனுமதிக்கும் வழியாகத்தான் செல்கிறோம் என்றும் கூறி உள்ளார்.

அப்போது போலீசார் புதிய யோசனையை தெரிவித்து சி.எம்.டி.ஏ. அருகே இருந்து புறப்படும் பேரணியாக பாதையை மாற்றி புதுப்பேட்டை மெயின் ரோடு வழியாக ஆதித்தனார் சிலை வரை வந்து ம.தி.மு.க. அலுவலகம் உள்ள ரோட்டின் வழியாக ராஜ ரத்தினம் ஸ்டேடியம் செல்லுங்கள் அப்போதுதான் நெரிசல் ஏற்படாது என்று வாய் மொழியாக கூறி உள்ளனர். இதை தி.மு.க. ஏற்றுக்கொண்டுள்ளதாக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் கூறினார்.

தி.மு.க. பேரணிக்கு அனுமதி மறுத்தாலும் பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக செல்வார்கள். அதையும் தடுத்தால் மறியல் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறினார்.

Tags:    

Similar News