செய்திகள்
செவ்வாழைப் பழம்

கிருஷ்ணகிரியில் தேனி செவ்வாழைப் பழங்கள் கிலோ ரூ.60-க்கு விற்பனை

Published On 2019-12-13 16:31 GMT   |   Update On 2019-12-13 16:31 GMT
கிருஷ்ணகிரியில் தேனி செவ்வாழைப் பழங்கள் ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் போட்டிபோட்டு வாங்கி சென்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தால், பல்வேறு பகுதிகளில் வாழை விவசாயம் பாதிப்படைந்தது. மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து எலக்கி, பச்சை பழம், பூவன்பழம், செவ்வாழை உள்ளிட்ட பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. 

தற்போது வாழை விவசாயம் அதிகமாக இல்லாததால் பழத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் பகுதியில் கிணற்று பாசனம் மூலம் விளைய வைக்கப்பட்ட செவ்வாழைப்பழம், நேந்திரம் பழம்,ரஸ்தாலி பழம் உள்ளிட்ட பழங்களை அப்பகுதி விவசாயிகள் வாடகை வேன்பிடித்து அதில் பழங்களை ஏற்றி சென்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரிக்கும் இரண்டு வேன்களில் செவ்வாழைப்பழம், நேந்திரம் பழம், ரஸ்தாலி பழங்களை ஏற்றிகொண்டு நகரின் மையப்பகுதிகள், ஆட்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் தங்கள் வேன்களை நிறுத்தி பழங்களை விற்பனை செய்கின்றனர்.

இதில் ஒரு கிலோ செவ்வாழைப் பழம், நேந்திரம் பழம் தலா ரூ. 60-க்கு விற்பனை செய்தனர். குறைந்த விலையில், பிரஷ்ஷாக கிடைத்த இந்த பழங்களை பொதுமக்கள் போட்டிபோட்டு வாங்கி சென்றனர்.
Tags:    

Similar News