செய்திகள்
மிரட்டல்

தஞ்சை அருகே இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொலை செய்வதாக மிரட்டிய டிரைவர் கைது

Published On 2019-12-05 13:04 GMT   |   Update On 2019-12-05 13:04 GMT
தஞ்சை அருகே மணல் கடத்தலை தடுத்தபோது இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொலை செய்வதாக மிரட்டிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்:

தஞ்சை அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள கோனுர் வெண்ணாறு தென்கரையில் சிலர் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாக அம்மாபேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இன்று காலை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. போலீசார் அந்த லாரியை வழிமறித்தனர். 

அப்போது டிரைவர் லாரியில் இருந்தவாறே, வழி விடுங்கள், இல்லையென்றால் லாரியை ஏற்றி கொலை செய்து விடுவேன் என இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் உடனடியாக  டிரைவரை மடக்கி பிடித்து லாரியில் இருந்து கீழே இறக்கினர். லாரியை சோதனை செய்ததில் அதில் மணல் திருட்டுத்தனமாக கடத்தப்படுவது தெரிந்தது. இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் மெலட்டூர் அருகே உள்ள கீழகளக்குடியை சேர்ந்த சரத்குமார்(வயது 24) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தல், பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News