செய்திகள்
கோப்பு படம்

லஞ்சம் கேட்டு ஆடியோவில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஆயுத படைக்கு மாற்றம்

Published On 2019-12-05 11:48 GMT   |   Update On 2019-12-05 11:48 GMT
ஆரணியில் லஞ்சம் கேட்டு ஆடியோ வெளியான விவகாரத்தில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஆயுத படைக்கு மாற்றப்பட்டார்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆகாரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (35). கடந்த மாதம் டிராக்டரில் மணல் கடத்தி வந்தபோது, டவுன் போலீசாரால் அவர் மடக்கப்பட்டார். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தேவராஜை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இதற்கிடையில் தேவராஜின் மனைவி நித்யதேவியிடம் ஆரணி தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபு பேசும் ஆடியோ வெளியாகி சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது.

அந்த ஆடியோவில் தேவராஜ் மனைவி நித்யதேவிக்கு சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபு போன் செய்து, என்னம்மா பிரச்சினை தேவராஜ்க்கு, என்னை வந்து நேரில் பார்க்கச்சொல்லு. மணல் வண்டி கேஸ் போடுவது பெரிய வி‌ஷயம் இல்ல. அதைவிட வாழ்க்கைதான் முக்கியம் எனக் கூறுகிறார்.

அதற்கு நித்யதேவி பதிலாக சார், மணல் ஓட்டும் போது வண்டியை பிடித்திருந்தால் சரி. ஜல்லி ஓட்டும்போது வண்டியை பிடித்து மணல் கேஸ் போடுவது நியாயமா? அதற்குண்டான ஆதாரம் எங்களிடம் இருக்கு. எங்களிடம் 50 ஆயிரம் வாங்கிக் கொண்டு கேசும் போடுவிங்களா... வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கணும். இல்லன்னா ஐகோர்ட்டில் கேஸ் போடுவோம். என் கணவர் ரொம்ப மனஉளைச்சலில் இருக்கார் என்று கூறுகிறார்.

சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபு சிரித்துக் கொண்டே தொடர்ந்து பேரம் பேசுகிறார்.

இந்த ஆடியோ போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை எற்படுத்தியது. இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி விசாரணை நடத்தினார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபுவை ஆயுதபடைக்கு மாற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் இடமாற்றம் செய்யபட்டார்.

மேலும் இந்த ஆடியோ விவகாரத்தில் இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி.க்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News