செய்திகள்
பொதுக்குழுவில் இபிஎஸ் உரை

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் - அதிமுக பொதுக்குழு தீர்மானம்

Published On 2019-11-24 06:14 GMT   |   Update On 2019-11-24 08:39 GMT
சென்னையில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சென்னை:

அ.தி.மு.க. பொதுக்குழு- செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது.

கூட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு:-

* சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டிய மத்திய அரசுக்கு நன்றி.

* மாநில சுயாட்சி, இருமொழி கொள்கை, மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள் தலையிடாத ஆட்சி முறை, அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் கல்வி முறை போன்றவற்றை அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோர் காட்டிய பாதையில் அ.தி.மு.க. பயனிக்கும்.

* தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும்.

* உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்காக தொண்டர்கள் உழைக்க வேண்டும். மகத்தான வெற்றி பெற சூளுரை ஏற்று அயராது உழைக்க வேண்டும்.

* அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை சுமார் ரூ.1,600 கோடியில் நிறைவேற்ற பணிகளை விரைந்து மேற்கொண்டு இருக்கும் அம்மாவின் அரசுக்கு பாராட்டு.

* இலங்கை தமிழர்கள் சமஉரிமை பெற்ற குடிமக்களாக வாழ்வதை உறுதி செய்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

* தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர் மற்றும் தி.மு.க. கட்சியினர் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை மறைக்க நடத்தி வரும் பொய் பிரசாரங்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறது.

* ஒட்டுமொத்த நிர்வாக செயல்திறமையில் சிறந்த மாநிலம் என்ற விருதினை பெற்றிருக்கும் அம்மாவின் அரசு நிகழ்த்தி வரும் சாதனைகளை மறைக்க முயற்சிக்கும் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம்.

* மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறது.

* உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி வெற்றி கண்டிருப்பதற்கும், தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்கியதற்கும், உயர் கல்வியின் வாய்ப்புகளை அனைவருக்கும் வழங்க புதிய பல கல்லூரிகளை தொடங்கிய அம்மாவின் அரசுக்கு பாராட்டு.

* ‘தமிழ்நாடு நாள்’ என்று அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு.

* கீழடியில் பெறப்பட்ட தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை காட்சிப்படுத்த புதிய அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாராட்டு.

* கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களை உருவாக்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி-பாராட்டு.

* உலக பெருந்தலைவர்கள் ஒன்றுகூட சிறந்த இடம் தமிழ்நாடு என்று பெருமிதத்துடன் சொல்லும் வகையில் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் தொண்மை சிறப்புகளை இயம்புவதிலும் சிறந்து விளங்கும் அம்மாவின் அரசை தலைமை ஏற்று நடத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு.

* புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியில் முதல்- அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு.

* தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு - வாழ்த்து.

* பொதுப்பணித்துறை மூலமாக குடிமராமத்து பணிகளால் வேலை வாய்ப்புகள் பெருக்கி நீர் ஆதாரங்களை ஆழப்படுத்தி சாதனை படைத்து இருக்கும் அம்மாவின் அரசுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாராட்டு.

* சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை ஒழித்த அம்மாவின் அரசுக்கு பாராட்டு.

உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழுவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் மத்திய மந்திரிகள் அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ராம்ஜெத்மலானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என். சே‌ஷன், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன், பழம்பெரும் நடிகை குசலகுமாரி, நெல் ஜெயராமன், புதுவை மாநில செயலாளர் புருஷோத்தமன், நடிகர் ரித்திஷ் உள்பட 246 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News