search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக பொதுக்குழு கூட்டம்"

    • அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கும் படிவங்களை அச்சடிக்கும் பணி நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை மின்னல் வேகத்தில் சென்னையில் நடந்தது.
    • படிவத்தில், “அ.தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை தேர்வு செய்ய ஒப்புதல் அளிக்கிறேன்” என்று அச்சிடப்பட்டிருந்தது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் இரு அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூடி ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது. அதோடு எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராகவும் அ.தி.மு.க. பொதுக்குழு தேர்வு செய்தது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தை அணுகினார்.

    ஆனால் தேர்தல் ஆணையம் இதுவரை அதை ஏற்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பில் 5 தடவை முயற்சி செய்தும் தேர்தல் ஆணையம் அசைந்து கொடுக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தீர்ப்பு நிலுவையில் உள்ளதால் அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக எந்த மாற்றமும் செய்ய இயலாது என்று அறிவித்தது.

    இதனால் தேர்தல் ஆணையத்தில் தற்போது வரை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்ற பழைய பதிவே இருக்கிறது.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தனித்தனியாக வேட்பாளரை அறிவித்துள்ளனர். அவர்களில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனு மீது தேர்தல் ஆணையம் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரிடம் பதில் பெற்று விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு நேற்று சில அதிரடி உத்தரவுகளை வெளியிட்டது. அதன்படி "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். இது தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.

    இந்த உத்தரவு வெளியானதும் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்று, பின்னர்அங்கிருந்து கார் மூலம் ஈரோடு வில்லரசம் பட்டியில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றார்.

    அங்கு அவர் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, செம்மலை, எம்.சி. சம்பத், அக்ரி கிருஷ்ண மூர்த்தி, கே.சி.கருப்பணன், கே.வி. ராமலிங்கம், தளவாய் சுந்தரம் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 3 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசுக்கு பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு பெற முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் விண்ணப்ப படிவம் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதில் பொதுக்குழு உறுப்பினரின் புகைப்படம், மற்றும் நோட்டரி பப்ளிக் சான்று, ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு என்ற இடத்தில் டிக் போடும் படி அச்சடிக்க முடிவு செய்யப்பட்டது.

    அந்த படிவங்களை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்து வேட்பாளர் கே.எஸ். தென்னரசுக்கு ஆதரவு கடிதம் பெற முடிவு செய்யப்பட்டது. இதே போல் ஓ. பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கும் இந்த படிவம் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் மூலம் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கும் படிவங்களை அச்சடிக்கும் பணி நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை மின்னல் வேகத்தில் சென்னையில் நடந்தது. அந்த படிவத்தில், "அ.தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை தேர்வு செய்ய ஒப்புதல் அளிக்கிறேன்" என்று அச்சிடப்பட்டிருந்தது.

    கடிதத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு தங்கள் புகைப்படத்தையும் ஒட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த ஒப்புதல் படிவங்கள் தயாரானதும் இரவோடு இரவாக சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டது. கார், விமானங்களில் அந்த படிவங்களை அ.தி.மு.க. நிர்வாகிகள் எடுத்து சென்றனர்.

    இன்று காலை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்து பெறும் நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடந்தன. எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் 98 சதவீத அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் மிகவும் ஆர்வமுடன் அந்த படிவங்களை பெற்று புகைப்படங்களை ஒட்டி கையெழுத்து போட்டு கொடுத்தனர்.

    இந்த பணிகள் அனைத்தையும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தங்கள் பகுதி மாவட்டங்களில் சரியாக நடக்கிறதா? என்று காலையில் இருந்தே தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். போனில் தொடர்பு கொண்டு பொதுக்குழு உறுப்பினர்களிடம் பேசி கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறார்கள்.

    இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பும், விறுவிறுப்பும் காணப்பட்டது. ஒப்புதல் கடிதம் வழங்கும் விஷயத்தில் எந்த குறைபாடும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் மிகவும் கவனமாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஒவ்வொரு அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும் போட்டோ ஒட்டி கையெழுத்திட்டனர். பிறகு அந்த ஒப்புதல் படிவத்துடன் ஒவ்வொருவரும் தங்கள் உறுப்பினர் அடையாள அட்டை நகல், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றையும் இணைத்து நோட்டரி பப்ளிக்கின் உறுதிமொழி பத்திரத்தையும் இணைத்து கொடுத்தார்கள்.

    தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. 2,663 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 2,539 பேர் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்க ஒப்புதல் அளித்து தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே 2,500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு கடிதம் பெற எடப்பாடி பழனிசாமி ஆதரவு தலைவர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு உள்ளனர்.

    சென்னையில் உள்ள 8 மாவட்ட செயலாளர்களுக்கும் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று காலை 10 மணிக்கு ஒப்புதல் படிவங்களை வழங்கினார். சான்றிதழ்களுடன் தயாராக வந்தவர்கள் அங்கேயே பூர்த்தி செய்து கொடுத்தனர்.

    அனைத்து படிவங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நாளை (ஞாயிற்றுக் கிழமை) மாலைக்குள் கட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

    நாளை மறுநாள் (6-ந்தேதி) டெல்லி செல்லும் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அந்த படிவங்களை தேர்தல் ஆணையத்திடம் காலை 11 மணிக்கு ஒப்படைக்கிறார். அதன் பிறகு தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தனது முடிவை அறிவிக்கும்.

    • ஒபிஎஸ் தனக்குத்தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என கூறுவது உண்மை அல்ல.
    • ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டாரே தவிர, 1.5 கோடி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தபோது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அதே கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் பி.வைரமுத்து ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் கடந்த 6ம் தேதி மூன்றாவது நாளாக நடைபெற்றது.

    தொடர்ந்து, நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு முன்னிலையில் 4வது நாளாக விசாரணை நடைபெற்றது.

    இந்நிலையில், இன்று 5வது நாளாக விசாரணை தொடங்கியுள்ளது. இதில் இரட்டை தலைமை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பனரா ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் கட்சியின் விதிப்படி நடைபெற்றது. ஒபிஎஸ் தனக்குத்தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என கூறுவது உண்மை அல்ல.

    ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டாரே தவிர, 1.5 கோடி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கிய பொதுக்குழுவே, அவற்றை ரத்து செய்துள்ளது என்று அதிமுக கட்சி சார்பில் வாதிடப்பட்டது.

    • உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தலைமையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
    • உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஈபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது.

    இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது, ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

    இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், சி.ஆரியமா சுந்தரம், விஜய் நாராயண், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், வைரமுத்து தரப்பில் வக்கீல் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் 25-ந்தேதி உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) காலை நீதிபதிகள் பிறப்பித்தனர்.

    தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்வதாக அவர்கள் தீர்ப்பு கூறினார்கள்.

    இது தொடர்பாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில், "ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்கிறோம்" என்று தெரிவித்தனர்.

    சென்னையில் ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஏற்கனவே தனி நீதிபதி தீர்ப்பு வழங்கி இருந்தார். இந்த தனி நீதிபதியின் தீர்ப்பை செல்லாது என்று தற்போது இரு அமர்வு நீதிபதிகள் அறிவித்து உள்ளனர். இதனால் தற்போது அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    • கழக பொதுச்செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட கழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
    • தலைமைக் கழகப் பொறுப்புகளில் குறைந்தது தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் விஷயத்தில் கட்சியின் சட்ட விதிகளில் அதிரடியாக திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

    கழக சட்ட திட்ட விதி எண் 20அ பிரிவு-1 கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது.

    * கழக உறுப்பினர்கள், கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட தகுதி உடையவர் ஆவார்கள்.

    * கழக பொதுச்செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட கழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

    * தலைமைக் கழகப் பொறுப்புகளில் குறைந்தது தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

    * குறைந்தது 10 மாவட்டக் கழகச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்டக் கழகச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். மாவட்டக் கழகச் செயலாளர், ஒரு வேட்பாளருக்கு மட்டும் தான் முன்மொழியவோ அல்லது வழிமொழியவோ வேண்டும்.

    * கழகத்தின் சட்ட திட்ட விதிமுறைகளில், விதி-20அ பிரிவு-2 "கழகப் பொதுச்செயலாளர், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்'' என்று மாற்றி அமைக்கப்படுகிறது.

    * கழகத்தின் சட்ட திட்ட விதிமுறைகளில், விதி-20ஆ பின்வருமாறு மாற்றி அமைக்கப்படுகிறது.

    * கழக துணை பொதுச்செயலாளர்களை, கழக செயலாளர் நியமனம் செய்வார்.

    "கழக சட்ட திட்ட விதிகளின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள "கழகப் பொதுச் செயலாளர்" கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் நீக்குவதற்கோ, மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியதல்ல.

    * கழகத்தின் சட்ட திட்ட விதிமுறைகளில், விதி எண். 45-ல், பின்வருவன சேர்க்கப்படுகிறது: "கழக சட்ட திட்ட விதிகளின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள "கழகப் பொதுச்செயலாளர்" கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் நீக்குவதற்கோ, மாற்றுவதற்கோ, தளர்த்துவதற்கோ அதிகாரம் இல்லை.

    இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்தலாம் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்தார்.
    • வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் திட்டமிட்டபடி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடந்தது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை எழுந்ததால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் தனித்தனி அணியாக பிரிந்தனர்.

    எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களில் 97 சதவீதம் பேர் ஆதரவு இருப்பதால் அவரது கை ஓங்கியது. ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து ஓரம்கட்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்தார். ஜூன் 23-ந்தேதி பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க கூறினார். ஆனால் அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் மீண்டும் அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஜூலை 11-ந்தேதி (இன்று) நடக்கும் பொதுக்குழுவை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த வழக்கிலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்தலாம் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்தார். இதையடுத்து சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் திட்டமிட்டபடி இன்று காலை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடந்தது. பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு எடப்பாடி பழனிசாமி காலை 9 மணிக்கு வந்து சேர்ந்தார்.

    எடப்பாடி பழனிசாமி கடந்த முறை பொதுக்குழுவுக்கு வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு வந்தார். ஆனால் இந்த முறை காருக்கு பதில் பிரசார வேனை பயன்படுத்தினார். இன்று காலை சுமார் 7 மணி அளவில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். பிரசார வேனில் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தார்.

    அப்போது அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் அண்ணன் இ.பி.எஸ். வாழ்க, கழகத்தின் அம்மா வாழ்க என்று கோஷங்கள் எழுப்பினார்கள். வேன் அங்கிருந்து புறப்பட்டு கோயம்பேடு வழியாக வந்தது. சாலையின் இருபக்கமும் தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாகமாக வரவேற்றனர்.

    மெயின் ரோட்டில் இருந்து மண்டபத்துக்கு செல்லும் பாதையில் அவரது வாகனம் தொண்டர்கள் கூட்டத்தில் மிதந்தபடி வந்தது. பொதுக்குழு கூட்ட அரங்குக்கு முன்பு மங்கள வாத்தியங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் அவருக்கு பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றார்கள். அதைத்தொடர்ந்து அவர் செயற்குழு கூட்டம் நடைபெறும் மேடைக்கு சென்றார். அங்கு செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். மேடையில் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே அமர்ந்திருந்தனர்.

    காலை 9.05 மணிக்கு முதலில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனை தலைமை தாங்கும்படி எடப்பாடி பழனிசாமி முன் மொழிந்தார். அதை திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார்.

    அதைத்தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய 16 தீர்மானங்கள் மற்றும் கட்சியின் தற்கால நிலை பற்றி விவாதிக்க பொன்னையன் செயற்குழுவின் ஒப்புதலுக்காக முன்மொழிந்தார். அதைத்தொடர்ந்து பொதுக்குழுவில் விவாதிப்பதற்கு செயற்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத்துடன் காலை 9.30 மணிக்கு செயற்குழு கூட்டம் நிறைவடைந்தது.

    பின்னர் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் அங்கிருந்த சிறப்பு வாசல் வழியாக பொதுக்குழு நடைபெற்ற அரங்கத்துக்கு சென்றனர். அதன்பிறகு காலை 9.40 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

    பொதுக்குழு கூட்டம் தொடங்கியதும் மேடையில் வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஏற்கனவே கோர்ட்டு தீர்ப்பு பற்றிய தகவல் கட்சியினரிடையே பரவியது.

    இதையடுத்து 'வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்' என்ற எம்.ஜி.ஆர். பாடல் ஒளிபரப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

    பொதுக்குழு கூட்டம் தொடங்குவதாக வைகை செல்வன் அறிவித்தார். அதன் பிறகு பொதுக்குழு கூட்டத்துக்கு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்குவதற்கு எடப்பாடி பழனிசாமி முன் மொழிந்தார். இதை கே.பி. முனுசாமி வழிமொழிந்தார்.

    பொதுக்குழுவில் வைக்கப்பட்டுள்ள 16 தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் நிறைவேற்றி தருமாறு நத்தம் விஸ்வநாதன் முன் மொழிந்தார். இதை டி.ஜெயக்குமார் வழி மொழிந்தார்.

    அதன் பிறகு பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரையும் பா.வளர்மதி வரவேற்று பேசினார். அதன்பிறகு தீர்மானங்களை ஆர்.பி.உதயகுமார் வாசித்தார். அதில் 3-வது தீர்மானமாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங் கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்வதாக ஆர்.பி. உதயகுமார் அறிவித்தார்.

    அதன்பிறகு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தார். இதற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.

    இதையடுத்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது.

    அதன்பிறகு அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளர் பதவிக்கு 4 மாதத்தில் தேர்தல் நடத்துவது என்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

    • வானகரம் மெயின் ரோட்டில் இருந்து பொதுக்குழு நடைபெற்ற திருமண மண்டபம் வரை இருபுறமும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தன. அதில் கலைக்குழுவினர் பேண்டு வாத்தியம் இசைத்தபடி இருந்தனர்.
    • எடப்பாடி பழனிசாமி வந்த கார் மட்டும் அந்த வழியில் அனுமதிக்கப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற ஸ்ரீவாரு மண்டபத்தில் இருந்து 1 கி.மீட்டர் தூரத்துக்கு முன்பே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு பொதுக்குழு உறுப்பினர்களும், தொண்டர்களும் சுமார் 1 கி.மீ தூரம் நடந்தே பொதுக்குழு கூட்டத்துக்கு சென்றனர். அதன்பிறகு மெயின் ரோட்டில் இருந்து பொதுக்குழு நடைபெற்ற மண்டபத்துக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் வாகனங்களும் அங்கு அனுமதிக்கப்படவில்லை.

    தனி வழியில் சென்ற எடப்பாடி பழனிசாமி

    வானகரம் மெயின் ரோட்டில் இருந்து பொதுக்குழு நடைபெற்ற திருமண மண்டபம் வரை இருபுறமும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தன. அதில் கலைக்குழுவினர் பேண்டு வாத்தியம் இசைத்தபடி இருந்தனர். எடப்பாடி பழனிசாமி வந்த கார் மட்டும் அந்த வழியில் அனுமதிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தனி வழியில் மண்டபத்துக்கு வந்தார். மற்றவர்கள் மெயின் ரோட்டில் இருந்து நடந்தே சென்றனர்.

    பொதுக்குழு நடைபெற்ற இடத்தின் முகப்பில் 'வரலாற்று சிறப்புமிக்க அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம், என்ற வாசகத்துடன் அலங்கார வளைவு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த அலங்கார வளைவில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது. ஓ.பன்னீர்செல்வம் படம் இடம்பெறவில்லை.

    போலீஸ் கெடுபிடிகளால் சிக்கி சீரழிந்த குடியிருப்புவாசிகள்

    பொதுக்குழு நடைபெற்ற ஸ்ரீவாரு மண்டபம் வழியாக அம்பத்தூருக்கு மெயின் ரோடு செல்கிறது. இந்த பகுதி முழுவதும் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அதேபோல் இந்த மண்டபத்தை தாண்டி தான் அப்பல்லோ ஆஸ்பத்திரியும் உள்ளது. மண்டபம் வழியாக போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது. இதனால் குடியிருப்புகளில் உள்ளவர்கள் வெளியே செல்வதற்கு வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பள்ளிசெல்லும் குழந்தைகளும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அதன் பிறகு தான் வேன்களில் ஏற முடிந்தது.

    இதேபோல் ஆஸ்பத்திரிக்கு சென்ற நர்சுகள் மற்றும் ஊழியர்கள் மெயின் ரோட்டில் இருந்து நடந்தே சென்றார்கள். ஆம்புலன்சும், நோயாளிகள் சென்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. அதேபோல் இந்த பகுதிகளில் வேலைகளுக்கு சென்ற தொழிலாளிகளும் நடந்தே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    நம்மில் ஒருவர் நமக்கான தலைவர்

    மண்டபத்தின் எதிரே 10 குதிரைகளில் குதிரை வீரர்கள் கையில் அ.தி.மு.க. கொடியை ஏந்தியபடி அமர்ந்து இருந்தனர். அதன் பின்புறத்தில் அமைக்கப்பட்டு இருந்த கட்-அவுட்டில் 'நம்மில் ஒருவர், நமக்கான தலைவர்' என்ற வாசகத்துடன் எடப்பாடி பழனிசாமி அலுவலகத்தில் அமர்ந்திருப்பதை போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது.

    அடையாள அட்டைகளை 'ஸ்கேன்' செய்ய 12 மேஜைகள்

    பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற இடத்தின் முன்பு பொதுக்குழு உறுப்பினர்களின் அடையாள அட்டைகளை ஸ்கேன் செய்வதற்காக 12 மேஜைகள் அமைக்கப்பட்டு அதில் 'லேப் டாப்'புகள் வைக்கப்பட்டு இருந்தன. பொதுக்குழுவில் பங்கேற்க வந்த பொதுக்குழு உறுப்பினர்களின் அடையாள அட்டைகள் அதில் ஸ்கேன் செய்து பரிசோதிக்கப்பட்டன.

    அடையாள அட்டை வைத்திருப்பவர் பொதுக்குழு உறுப்பினர் தானா என்று உறுதி செய்த பிறகே அவர்கள் பொதுக்குழு கூட்டத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் பொதுக்குழு நுழைவு வாயில் மெட்டல் புரெடக்டர் மூலம் பரிசோதனையும் நடத்தப்பட்டது.

    முககவசத்துடன் பொதுக்குழு உறுப்பினர்கள்

    பொதுக்குழு கூட்டத்துக்கு வந்த உறுப்பினர்களில் பலர் முக கவசங்கள் அணிந்தபடியே வந்தனர். முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு உள்ளே நுழைந்ததும் முக கவசங்கள் வழங்கப்பட்டன. கையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அனைவருக்கும் சிறிய கிருமிநாசினி பாட்டில் கொடுக்கப்பட்டது. உடல் வெப்ப பரிசோதனையும் நடத்தப்பட்டது.

    கட்அவுட் பேனரில் ஓ.பன்னீர்செல்வம் படம் இல்லை

    கடந்த முறை பொதுக்குழு கூட்டம் நடந்த போது பூந்தமல்லி நெடுஞ்சாலை முதல் பொதுக்குழு நடைபெற்ற இடம் வரை இருபுறமும் ஏராளமான கட்அவுட்-பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ,பன்னீர்செல்வம் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த முறை ஒரு பேனர், கட்-அவுட்டில் கூட ஓ.பன்னீர்செல்வம் படம் இடம்பெறவில்லை.

    அதேபோல் முகப்பில் கடந்த முறை ஓ.பன்னீர்செல்வத்தின் முழு உயர கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது. இந்த முறை ஓ.பன்னீர்செல்வம் கட்அவுட் வைக்கப்படவில்லை. அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகிய 4 பேரின் முழு உயர கட்அவுட் மட்டும் இடம்பெற்றிருந்தன.

    • மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் உள்ளே செல்ல அடையாள அட்டை காண்பித்தால்தான் செல்ல முடியும்.
    • பொதுக்குழு நுழைவு வாயிலிலும் பல்வேறு இடங்களில் கியூ ஆர் கோடு அட்டை பரிசோதிக்கும் எந்திரங்கள் இருக்கின்றன.

    சென்னை:

    சென்னை வானகரத்தில் நாளை (திங்கட்கிழமை) அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

    நாளை காலை 9 மணிக்கு சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வர உள்ள நிலையில் நம்பிக்கையுடன் அவர்கள் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்து முடித்துள்ளனர். கடந்த தடவை நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தின் போது ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் நவீன வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    பொதுக்குழுவிற்கான பந்தல், மேடை, வரவேற்பு, உணவு, இருக்கை அமைப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் 99 சதவீதத்தை முடித்து நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. மேடை 30 மீட்டர் அகலத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

    பொதுக்குழு நடைபெறும் பந்தல் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் முகப்பு தோற்றம் ஜார்ஜ் கோட்டை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமியின் ஆளுயர படம் இருபுறமும் அமையப் பெற்றுள்ளது. நடுவில் அண்ணா படம் இடம் பெற்றுள்ளது.

    வழக்கமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் படங்கள் இடம்பெறும். ஆனால் இந்த முறை எடப்பாடி பழனிசாமி படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

    பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கியூ ஆர் கோடுடன் அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நுழைவு அட்டையை காட்டினால்தான் பொதுக்குழு கூட்டம் நடக்கும் அரங்கத்துக்குள் செல்ல முடியும். இதைக் கருத்தில் கொண்டு பொதுக்குழு கூட்ட நுழைவு பகுதியில் ஏராளமான கியூ ஆர் கோடு அடையாள அட்டையை அனுமதிக்கும் எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் உள்ளே செல்ல அடையாள அட்டை காண்பித்தால்தான் செல்ல முடியும். அதுபோல பொதுக்குழு நுழைவு வாயிலிலும் பல்வேறு இடங்களில் கியூ ஆர் கோடு அட்டை பரிசோதிக்கும் எந்திரங்கள் இருக்கின்றன. அந்த எந்திரங்களில் அடையாள அட்டையை காட்டினால்தான் உறுப்பினர்கள் உள்ளே செல்ல முடியும்.

    தேவையில்லாமல் மற்றவர்கள் பொதுக்குழு அரங்கத்திற்குள் நுழைவதை தடுக்கவே இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பொதுக்குழு நடக்கும் வானகரம் பகுதியில் சாலையின் இருபுறமும் அ.திமு.க. கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. திரும்பும் திசையெல்லாம் எடப்பாடி பழனிசாமி படம் உள்ள பதாகைகள் பொறுத்தப்பட்டுள்ளன. ஒரு இடத்திலும் ஓ.பன்னீர் செல்வம் படத்தை பார்க்க இயலவில்லை.

    இந்த நிலையில் பொதுக்குழு கூட்ட அரங்குக்குள் இன்று காலை முதல் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இன்று மாலைக்குள் அந்த பணிகள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரே இடத்தில் திரண்டால் குழப்பம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சாப்பிடும் இடம் தனியாக பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கும் இன்று காலை முதல் இருக்கைகள் போடப்பட்டு வருகிறது.

    பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட வாரியாக கையெழுத்து போடுவதற்காக தனித்தனி அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிறு குழப்பம் கூட வந்துவிடக்கூடாது என்று அனைத்து ஏற்பாடுகளும் மிகுந்த ஆலோசனைக்கு பிறகு செய்து முடிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து பொதுக்குழுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்து வரும் முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் கூறியதாவது:-

    பொதுக்குழுவுக்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டன. காலை 7 மணி முதல் உறுப்பினர்கள் பந்தலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். கோட்டை வடிவில் பிரமாண்ட முகப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பொதுக்குழுவிற்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 10 குதிரைகள், 2 யானைகள் மூலம் வரவேற்பு அளிக்கப்படுகின்றன.

    இதுதவிர இசை கலைஞர்களின் நடனம், நாட்டிய நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான் மாநில இசை கலைஞர்கள் 250 பேர் பங்கேற்கிறார்கள். திருப்பதியில் இருந்து நாதஸ்வர கலைஞர்கள் வருகிறார்கள்.

    பொதுக்குழுவிற்கு வரும் வயதானவர்களை அழைத்து செல்ல 2 பேட்டரி கார் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரோட்டில் இருந்து பந்தலுக்கு செல்ல இது உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுக்குழு நடத்த திட்டமிட்டுள்ள பந்தல், மேடை இறுதி கட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பா.பென்ஜமின் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

    • சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஒரு புது வழக்கை தாக்கல் செய்தார்.
    • அதில் 11-ந்தேதி பொதுக்குழு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது சட்ட விரோமானது. எனவே தடை விதிக்க வேண்டும் என்று முறையிட்டு இருந்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு என்றாலே கடைசி நிமிடம் வரை "சஸ்பென்ஸ்" காட்சிகளாகவே தொடருகிறது.

    கடந்த மாதம் 23-ந்தேதி பொதுக்குழு கூட்டிய போதும் பகலில் வெளியான தீர்ப்பின்படி பொதுக்குழு நடத்த தடையில்லை என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால் ஓ.பன்னீர் செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை 2 நீதிபதிகள் அடங்கிய டிவிசன் பெஞ்ச் விசாரித்தது.

    விடிய விடிய விசாரணை நடந்தது. இதனால் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலையில் தீர்ப்பு வெளியானது. பொதுக்குழு கூட்டத்தை கூட்டலாம். ஆனால் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

    இதையடுத்து பொதுக்குழு கூட்டம் தொடங்கியதும் 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

    அன்றைய கூட்டத்திலேயே 11-ந்தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் தனித்தனி கோரிக்கைகளுடன் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார்கள்.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள் உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது. 11-ந்தேதி பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று தீர்ப்பளித்தார்கள்.

    இதையடுத்து எந்த தடங்கலும் இல்லாமல் 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும். திட்டமிட்டபடி எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    இந்த நிலையில் மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் ஒரு புது வழக்கை தாக்கல் செய்தார். அதில் 11-ந்தேதி பொதுக்குழு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது சட்ட விரோமானது. எனவே தடை விதிக்க வேண்டும் என்று முறையிட்டு இருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை நேற்று மாலையில் முடிவடைந்த நிலையில் பொதுக்குழு கூடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு தீர்ப்பு வெளியாக உள்ளது.

    தீர்ப்பு என்னவாக இருக்கும்? பொதுக்குழு நடத்த அனுமதி கிடைக்குமா? அல்லது முன்பு போலவே ஏதாவது நிபந்தனையுடன் பொதுக்குழு கூட்ட அனுமதி வழங்கப்படுமா? என்ற பல்வேறு கேள்விகளுடன் கட்சியினரிடையே உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் மட்டுமின்றி மக்கள் மனதிலும் நிலவுகிறது.
    • தீர்ப்பு யாருக்கு சாதகமாக வருமோ என்று இருதரப்பினரும் திக், திக் மனநிலையுடன் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை சர்ச்சை எழுந்ததால் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியினரும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினரும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களில் 97 சதவீதம் பேர் ஆதரவு உள்ளது. மேலும் கட்சி தொண்டர்களும் 99 பேர் சதவீதம் எடப்பாடி பழனிசாமியையே ஆதரிக்கின்றனர்.

    எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியதால் ஓ.பன்னீர்செல்வத்தின் பதவிகள் பறிக்கப்படுவது உறுதியானது. அந்த பதவிகளை விட்டுவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை ஐகோர்ட்டை நாடினார்.

    தேர்தல் ஆணையம் இதுவரை ஓ.பன்னீர் செல்வம் கொடுத்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை ஐகோர்ட்டில் அவர் தொடர்ந்த வழக்கும் எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவால் தகர்க்கப்பட்டது.

    இதற்கிடையே தனக்கு எதிராக எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தொடர்ந்தார். கடந்த 2 நாட்களாக அந்த மனு மீதான விசாரணை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் நடந்தது.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும், எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் வக்கீல்கள் கடும் வாதம் செய்தனர். நேற்று மாலை வரை அந்த வழக்கு விசாரணை நீடித்தது.

    இறுதியில் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்தார்.

    திங்கட்கிழமை (11-ந்தேதி) காலை 9.15 மணிக்கு அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிசாமி அணியினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். ஆனால் 9 மணிக்கு தான் தீர்ப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டு இருப்பதால் அ.தி.மு.க. வட்டாரத்தில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.

    அ.தி.மு.க. பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் மட்டுமின்றி மக்கள் மனதிலும் நிலவுகிறது. தீர்ப்பு யாருக்கு சாதகமாக வருமோ என்று இருதரப்பினரும் திக், திக் மனநிலையுடன் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

    இதற்கிடையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் திட்டமிட்டபடி திங்கட்கிழமை காலை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்திவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

    வானகரம் ஸ்ரீ வாரு திருமண மண்டப வளாகத்தில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதில் 90 சதவீதம் பணிகள் நடந்து முடிந்து விட்டன. மீதம் உள்ள 10 சதவீத பணிகளும் நாளை முடிந்து விடும் என்று தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் நடக்குமா என்ற சந்தேகம் பொதுக்குழு உறுப்பினர்களிடையே எழுந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அணியின் மூத்த தலைவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.

    அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களை சென்னைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யபபட்டுள்ளன. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலைக்குள் சென்னைக்கு வந்துவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் உற்சாகத்துடன் சென்னைக்கு வர தொடங்கி விட்டனர்.

    பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கியூ ஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. பொதுக்குழு கூட்டத்துக்கு வருபவர்கள் எங்கெங்கு தங்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு உள்ளன. எடப்பாடி பழனிசாமி அணியினர் அனைத்து வகையிலும் முழு ஏற்பாடுகளும் செய்து தயார் நிலையில் உள்ளனர்.

    கோர்ட்டு தீர்ப்பு திங்கட்கிழமை காலை அறிவிக்கப்பட்டதும் அதற்கேற்ப செயல்பட மூத்த தலைவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எனவே அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பு நிலவுகிறது.

    எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள மூத்த தலைவர்கள் அனைவரும் தங்களுக்கு சாதகமாக கோர்ட்டு தீர்ப்பு வரும் என்று 100 சதவீதம் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இது குறித்து அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் உள்ளது. அவரது முட்டுக்கட்டைகளால் கட்சிப் பணிகள் தேங்கிவிட்டன. கட்சி நிர்வாகிகளுக்கு முறையாக சம்பளம் கூட கொடுக்க முடியவில்லை.

    பாராளுமன்ற மேல்சபை தேர்தலின் போது அ.தி.மு.க. வேட்பாளர்களை ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்ய முடியாமல் போனதற்கு அவர்தான் காரணமாகும். அவரது சுயநலத்தால் அ.தி.மு.க.வை அழிக்க பார்க்கிறார். அவரது மகன் தி.மு.க. தலைவரை சந்தித்து பேசுகிறார். இதையெல்லாம் நாங்கள் எப்படி ஏற்க முடியும்.

    ஓ.பன்னீர்செல்வத்தை சரியான வழியில் கொண்டு வர அ.தி.மு.க. தலைவர்கள் அனைவரும் பேசி விட்டோம். அவர் சுயநலத்துடன் மட்டுமே இருக்கிறார். கட்சி நலனை பார்க்கவே இல்லை.

    எனவே இனி அவருடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது. ஒற்றை தலைமைக்கு அ.தி.மு.க. உறுப்பினர்களில் 2432 பேரின் ஆதரவு இருக்கிறது. எனவே கட்சி நலனுக்கான முடிவுகள் உறுதியாக எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுக்குழு மேடை 80 அடி நீளம், 40 அடி அகலத்தில் 300 பேர் அமரும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. செயற்குழுவிற்கு தனியாக ஒரு கூடாரமும், மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.
    • மேடை 30 அடி நீளம், 15 அடி அகலத்தில் நிறுவப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் 100 பேர் அமர இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழுவை 11-ந்தேதி (திங்கட்கிழமை) நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிற போதிலும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.

    சென்னையை அடுத்த வானகரம் திருமண மண்டபத்தின் முன்பகுதியில் பிரமாண்ட பந்தல் பொதுக்குழுவிற்காக போடப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் 3000 பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.

    பொதுக்குழு மேடை 80 அடி நீளம், 40 அடி அகலத்தில் 300 பேர் அமரும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. செயற்குழுவிற்கு தனியாக ஒரு கூடாரமும், மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. மேடை 30 அடி நீளம், 15 அடி அகலத்தில் நிறுவப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் 100 பேர் அமர இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

    பொதுக்குழு பந்தல், மேடை, உணவு, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் செய்து வருகிறார். முழு வீச்சில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-

    பொதுக்குழுவிற்கு வரும் உறுப்பினர்களுக்கு 'கியூஆர்' கோடுவுடன் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

    அதை பெற்றுக் கொண்டு மண்டபத்தின் பிரதான ஹாலில் வருகை பதிவேட்டில் அனைவரும் கையெழுத்திட வேண்டும். கழக ரீதியாக உள்ள 75 மாவட்டங்களுக்கு தனித்தனியாக மேஜை போடப்பட்டு அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்படுகிறது.

    கையெழுத்து போட்டவுடன் அவர்கள் காலை சிற்றுண்டி சாப்பிடும் இடத்திற்கு செல்ல வேண்டும். இட்லி, பொங்கல், பூரி, கேசரி, போன்றவை வினியோகிக்கப்படும்

    காலை 9 மணிக்கு செயற்குழு கூட்டம் கூடும். அவை சிறிது நேரத்தில் முடிந்தவுடன் 9.30 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடங்கும்.

    செயற்குழு நடந்து முடிவதற்குள் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பந்தலில் அமர வைக்கப்படுவார்கள். பொதுக்குழு முடிந்தவுடன் அனைவருக்கும் மதியம் சைவ உணவு ஏற்பாடு செயப்பட்டுள்ளது. வடை, பாயாசத்துடன் 24 வகையான உணவு பரிமாறப்படும்.

    பொதுக்குழுவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. போலீஸ் பாதுகாப்பும் கேட்கப்பட்டுள்ளது. இதுவரையில் இல்லாத அளவில் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படும் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பொதுக்குழுவிற்கு வரும் நிர்வாகிகள் அனைவரும் மனநிறைவுடன் செல்லும் வகையில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் பந்தலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    பொதுக்குழு மற்றும் செயற்குழுவிற்கு தேவையான விரிவான சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனால் சட்ட சிக்கல்கள் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மிகுந்த கவனமுடன் செயலாற்றி வருகிறார்கள்.
    • இதை தொடர்ந்து ஸ்ரீவாரு திருமண மண்டபத்துக்கு வெளியே பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இரு தரப்பினரும் மாறி மாறி பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.

    எடப்பாடி பழனிசாமியை கட்சியின் தலைமை பதவிக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக வருகிற 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனால் சட்ட சிக்கல்கள் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மிகுந்த கவனமுடன் செயலாற்றி வருகிறார்கள். இதை தொடர்ந்து ஸ்ரீவாரு திருமண மண்டபத்துக்கு வெளியே பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் நாளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள்.

    சமூக இடைவெளியை பின்பற்றி 3 ஆயிரம் இருக்கைகள் போடப்பட உள்ளது. இதனை கருத்தில் கொண்டு விசாலமான இட வசதியுடன் பொதுக்குழு கூட்டத்துக்கு பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்துவதற்கு காவல்துறையில் உரிய அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

    • அதிமுக அலுவலகம் ஒபிஎஸ் வரவுள்ளதால் கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.
    • பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.

    சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் செல்வதாக தகவல் வெளியானது.

    அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் அதிமுக அலுவலகம் ஒபிஎஸ் வரவுள்ளதால் கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.

    இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி ஜூன் 23-ம் தேதி நடைபெறும். ஒற்றைத் தலைமை விவகாரம் செயல் வடிவம் பெறுமா என்பது குறித்து விரைவில் தெரியவரும். கட்சியில் எந்த முடிவாக இருந்தாலும ஒருமித்த கருத்துடன் எடுக்கப்படும்.

    அதேபோல், ஓபிஎஸ் கட்சி அலுவலகம் வருகைக்கும், அதிமுக தீர்மான குழு கூட்டம் நிறைவுக்கும் சம்பந்தமில்லை. அதிமுக தீர்மானக் குழு கூட்டம் ஜூன் 18-ம் தேதி மீண்டும் நடைபெறும்.

    பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×