search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுக்குழுவுக்கு 1 கி.மீ. தூரம் நடந்து சென்ற தொண்டர்கள்
    X

    பொதுக்குழுவுக்கு 1 கி.மீ. தூரம் நடந்து சென்ற தொண்டர்கள்

    • வானகரம் மெயின் ரோட்டில் இருந்து பொதுக்குழு நடைபெற்ற திருமண மண்டபம் வரை இருபுறமும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தன. அதில் கலைக்குழுவினர் பேண்டு வாத்தியம் இசைத்தபடி இருந்தனர்.
    • எடப்பாடி பழனிசாமி வந்த கார் மட்டும் அந்த வழியில் அனுமதிக்கப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற ஸ்ரீவாரு மண்டபத்தில் இருந்து 1 கி.மீட்டர் தூரத்துக்கு முன்பே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு பொதுக்குழு உறுப்பினர்களும், தொண்டர்களும் சுமார் 1 கி.மீ தூரம் நடந்தே பொதுக்குழு கூட்டத்துக்கு சென்றனர். அதன்பிறகு மெயின் ரோட்டில் இருந்து பொதுக்குழு நடைபெற்ற மண்டபத்துக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் வாகனங்களும் அங்கு அனுமதிக்கப்படவில்லை.

    தனி வழியில் சென்ற எடப்பாடி பழனிசாமி

    வானகரம் மெயின் ரோட்டில் இருந்து பொதுக்குழு நடைபெற்ற திருமண மண்டபம் வரை இருபுறமும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தன. அதில் கலைக்குழுவினர் பேண்டு வாத்தியம் இசைத்தபடி இருந்தனர். எடப்பாடி பழனிசாமி வந்த கார் மட்டும் அந்த வழியில் அனுமதிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தனி வழியில் மண்டபத்துக்கு வந்தார். மற்றவர்கள் மெயின் ரோட்டில் இருந்து நடந்தே சென்றனர்.

    பொதுக்குழு நடைபெற்ற இடத்தின் முகப்பில் 'வரலாற்று சிறப்புமிக்க அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம், என்ற வாசகத்துடன் அலங்கார வளைவு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த அலங்கார வளைவில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது. ஓ.பன்னீர்செல்வம் படம் இடம்பெறவில்லை.

    போலீஸ் கெடுபிடிகளால் சிக்கி சீரழிந்த குடியிருப்புவாசிகள்

    பொதுக்குழு நடைபெற்ற ஸ்ரீவாரு மண்டபம் வழியாக அம்பத்தூருக்கு மெயின் ரோடு செல்கிறது. இந்த பகுதி முழுவதும் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அதேபோல் இந்த மண்டபத்தை தாண்டி தான் அப்பல்லோ ஆஸ்பத்திரியும் உள்ளது. மண்டபம் வழியாக போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது. இதனால் குடியிருப்புகளில் உள்ளவர்கள் வெளியே செல்வதற்கு வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பள்ளிசெல்லும் குழந்தைகளும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அதன் பிறகு தான் வேன்களில் ஏற முடிந்தது.

    இதேபோல் ஆஸ்பத்திரிக்கு சென்ற நர்சுகள் மற்றும் ஊழியர்கள் மெயின் ரோட்டில் இருந்து நடந்தே சென்றார்கள். ஆம்புலன்சும், நோயாளிகள் சென்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. அதேபோல் இந்த பகுதிகளில் வேலைகளுக்கு சென்ற தொழிலாளிகளும் நடந்தே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    நம்மில் ஒருவர் நமக்கான தலைவர்

    மண்டபத்தின் எதிரே 10 குதிரைகளில் குதிரை வீரர்கள் கையில் அ.தி.மு.க. கொடியை ஏந்தியபடி அமர்ந்து இருந்தனர். அதன் பின்புறத்தில் அமைக்கப்பட்டு இருந்த கட்-அவுட்டில் 'நம்மில் ஒருவர், நமக்கான தலைவர்' என்ற வாசகத்துடன் எடப்பாடி பழனிசாமி அலுவலகத்தில் அமர்ந்திருப்பதை போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது.

    அடையாள அட்டைகளை 'ஸ்கேன்' செய்ய 12 மேஜைகள்

    பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற இடத்தின் முன்பு பொதுக்குழு உறுப்பினர்களின் அடையாள அட்டைகளை ஸ்கேன் செய்வதற்காக 12 மேஜைகள் அமைக்கப்பட்டு அதில் 'லேப் டாப்'புகள் வைக்கப்பட்டு இருந்தன. பொதுக்குழுவில் பங்கேற்க வந்த பொதுக்குழு உறுப்பினர்களின் அடையாள அட்டைகள் அதில் ஸ்கேன் செய்து பரிசோதிக்கப்பட்டன.

    அடையாள அட்டை வைத்திருப்பவர் பொதுக்குழு உறுப்பினர் தானா என்று உறுதி செய்த பிறகே அவர்கள் பொதுக்குழு கூட்டத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் பொதுக்குழு நுழைவு வாயில் மெட்டல் புரெடக்டர் மூலம் பரிசோதனையும் நடத்தப்பட்டது.

    முககவசத்துடன் பொதுக்குழு உறுப்பினர்கள்

    பொதுக்குழு கூட்டத்துக்கு வந்த உறுப்பினர்களில் பலர் முக கவசங்கள் அணிந்தபடியே வந்தனர். முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு உள்ளே நுழைந்ததும் முக கவசங்கள் வழங்கப்பட்டன. கையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அனைவருக்கும் சிறிய கிருமிநாசினி பாட்டில் கொடுக்கப்பட்டது. உடல் வெப்ப பரிசோதனையும் நடத்தப்பட்டது.

    கட்அவுட் பேனரில் ஓ.பன்னீர்செல்வம் படம் இல்லை

    கடந்த முறை பொதுக்குழு கூட்டம் நடந்த போது பூந்தமல்லி நெடுஞ்சாலை முதல் பொதுக்குழு நடைபெற்ற இடம் வரை இருபுறமும் ஏராளமான கட்அவுட்-பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ,பன்னீர்செல்வம் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த முறை ஒரு பேனர், கட்-அவுட்டில் கூட ஓ.பன்னீர்செல்வம் படம் இடம்பெறவில்லை.

    அதேபோல் முகப்பில் கடந்த முறை ஓ.பன்னீர்செல்வத்தின் முழு உயர கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது. இந்த முறை ஓ.பன்னீர்செல்வம் கட்அவுட் வைக்கப்படவில்லை. அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகிய 4 பேரின் முழு உயர கட்அவுட் மட்டும் இடம்பெற்றிருந்தன.

    Next Story
    ×