search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    75 அ.தி.மு.க. மாவட்டங்களுக்கும் தனித்தனியாக கையெழுத்து வாங்க வருகைப் பதிவேடு தயார்
    X

    75 அ.தி.மு.க. மாவட்டங்களுக்கும் தனித்தனியாக கையெழுத்து வாங்க வருகைப் பதிவேடு தயார்

    • பொதுக்குழு மேடை 80 அடி நீளம், 40 அடி அகலத்தில் 300 பேர் அமரும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. செயற்குழுவிற்கு தனியாக ஒரு கூடாரமும், மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.
    • மேடை 30 அடி நீளம், 15 அடி அகலத்தில் நிறுவப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் 100 பேர் அமர இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழுவை 11-ந்தேதி (திங்கட்கிழமை) நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிற போதிலும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.

    சென்னையை அடுத்த வானகரம் திருமண மண்டபத்தின் முன்பகுதியில் பிரமாண்ட பந்தல் பொதுக்குழுவிற்காக போடப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் 3000 பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.

    பொதுக்குழு மேடை 80 அடி நீளம், 40 அடி அகலத்தில் 300 பேர் அமரும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. செயற்குழுவிற்கு தனியாக ஒரு கூடாரமும், மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. மேடை 30 அடி நீளம், 15 அடி அகலத்தில் நிறுவப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் 100 பேர் அமர இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

    பொதுக்குழு பந்தல், மேடை, உணவு, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் செய்து வருகிறார். முழு வீச்சில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-

    பொதுக்குழுவிற்கு வரும் உறுப்பினர்களுக்கு 'கியூஆர்' கோடுவுடன் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

    அதை பெற்றுக் கொண்டு மண்டபத்தின் பிரதான ஹாலில் வருகை பதிவேட்டில் அனைவரும் கையெழுத்திட வேண்டும். கழக ரீதியாக உள்ள 75 மாவட்டங்களுக்கு தனித்தனியாக மேஜை போடப்பட்டு அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்படுகிறது.

    கையெழுத்து போட்டவுடன் அவர்கள் காலை சிற்றுண்டி சாப்பிடும் இடத்திற்கு செல்ல வேண்டும். இட்லி, பொங்கல், பூரி, கேசரி, போன்றவை வினியோகிக்கப்படும்

    காலை 9 மணிக்கு செயற்குழு கூட்டம் கூடும். அவை சிறிது நேரத்தில் முடிந்தவுடன் 9.30 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடங்கும்.

    செயற்குழு நடந்து முடிவதற்குள் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பந்தலில் அமர வைக்கப்படுவார்கள். பொதுக்குழு முடிந்தவுடன் அனைவருக்கும் மதியம் சைவ உணவு ஏற்பாடு செயப்பட்டுள்ளது. வடை, பாயாசத்துடன் 24 வகையான உணவு பரிமாறப்படும்.

    பொதுக்குழுவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. போலீஸ் பாதுகாப்பும் கேட்கப்பட்டுள்ளது. இதுவரையில் இல்லாத அளவில் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படும் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பொதுக்குழுவிற்கு வரும் நிர்வாகிகள் அனைவரும் மனநிறைவுடன் செல்லும் வகையில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் பந்தலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    பொதுக்குழு மற்றும் செயற்குழுவிற்கு தேவையான விரிவான சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×