செய்திகள்
ரேசன் அரிசி பறிமுதல்

தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு 50 டன் ரே‌ஷன் அரிசி கடத்தல்- 4 பேர் கைது

Published On 2019-11-23 10:57 GMT   |   Update On 2019-11-23 10:57 GMT
தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு 50 டன் ரே‌ஷன் அரிசி கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவையில் உள்ள கிருஷ்ணகிரி- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை டி.எஸ்.பி. ரவிக்குமார் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்த பின்னரே அனுமதித்து வருகின்றனர்.

அப்போது போலீசார் அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். இதில் லாரியில் 17 டன் ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லாரியை ஓட்டி வந்த டிரைவர் அஜித்குமாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த லாரி ஈரோட்டை சேர்ந்த தீபக்குமார் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இவர்கள் அரிசியை கர்நாடகாவுக்கு கடத்தி செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அஜித்குமார் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காலை 11 மணியளவில் அந்த வழியாக வேலூரில் இருந்து லாரி வந்தது. அந்த லாரியை அதிகாரிகள் மறித்தனர். பின்னர் அதில் ஏறி சோதனை செய்தனர். அப்போது அதில் 20 டன் ரே‌ஷன் அரிசி கர்நாடகாவுக்கு கடத்தி செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியில் அரிசி கடத்தி வந்த தாமோதரன் மற்றும் லாரி டிரைவர் சிவப்பிரகாசம் ஆகியோரை கைது செய்தனர்.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் கடந்த 2 நாட்களாக மேற்கொண்ட நடவடிக்கையில் இதுவரை தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 50 டன் ரே‌ஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அரிசி கடத்தி வந்த 3 லாரிகள், 1 பொலிரோ பிக்அப் வேன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News