செய்திகள்
யானைகள் மோதியதில் தீப்பிடித்து எரிந்த மின்சார டிரான்ஸ்பார்மர்

கோவை அருகே யானைகள் மோதியதில் தீ பிடித்து வெடித்த டிரான்ஸ்பார்மர்

Published On 2019-11-16 11:02 GMT   |   Update On 2019-11-16 11:02 GMT
கோவை அருகே வனத்துறையினர் காட்டு யானைகள் கூட்டத்தை விரட்டிய போது அவைகள் மோதியதில் மின்சார டிரான்ஸ்பார்மர் தீ பிடித்து வெடித்தது.
கவுண்டம்பாளையம்:

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த நாயக்கன்பாளையம் கென்னடி நகர், தேமையம்பாளையம் சுடுகாடு அருகே இன்று அதிகாலை 4 மணி அளவில் மலைப்பகுதியில் இருந்து இறங்கிவந்த ஒரு குட்டி உட்பட 5 காட்டு யானைகள் கொண்ட காட்டு யானை கூட்டம் ஊருக்குள் புகுந்தது.

இந்த யானைகள் கூட்டம் விவசாய நிலங்களில் சர்வசாதாரணமாக நடந்து வந்தன. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் பட்டாசுகள் வெடித்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

நாயக்கன்பாளையம் கென்னடி நகரில் இருந்து வனத்துறையினர் காட்டு யானைகள் கூட்டத்தை விரட்டிய போது அவைகள் மிரண்டு ஓடும் போது அங்கிருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது மோதியது.

இதில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. பின்னர் யானைகள் அங்கிருந்து சென்று விட்டது. ஊருக்குள் புகுந்த காட்டு யானை கூட்டத்தை வனத்துறையினர் அங்குள்ள கருப்பட்ராயன் கோவில் மலை பகுதிக்கு விரட்டி விட்டனர்.

யானை கூட்டம் ஊருக்குள் புகுந்தது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது காட்டு யானைகள் மலைப்பகுதியில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதிக்கு உணவு தேடி வருகிறது.

எனவே வனப்பகுதியில் அதற்கான உணவுகளை ஏற்பாடு செய்துவிட்டால் அவைகள் ஊருக்குள் வராது . உயிரிழப்புகள் ஏற்படும் முன் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

யானைகள் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
Tags:    

Similar News