செய்திகள்
வானதி சீனிவாசன்

மு.க.ஸ்டாலின் வகுப்புவாத அரசியல் நடத்துகிறார் - வானதி சீனிவாசன் கண்டனம்

Published On 2019-11-15 09:33 GMT   |   Update On 2019-11-15 09:41 GMT
மாணவி தற்கொலை விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் வகுப்புவாத அரசியல் நடத்துகிறார் என்று தமிழக பா.ஜனதா பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக பா.ஜனதா பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறியதாவது:-

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்டது துரதிருஷ்டமானது. மிகவும் வருத்தமானது. பெற்றோர்களின் கனவும், நாட்டின் கனவும் தகர்ந்துள்ளது.

பல மாணவ-மாணவிகள் இப்படி உயிரை மாய்த்து வருவது இதயத்தை வலிக்க செய்கிறது. ஒரு தாயின் ஸ்தானத்தில் இருந்து இந்த மாதிரி குழந்தைகளை பறிகொடுப்பது தாங்க முடியாத வேதனை.

மாணவி மரணத்துக்கான காரணமும், நடவடிக்கைகளும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எல்லா உயிர்களையும் சமமாக பார்க்க வேண்டும். மத்திய அரசு நிறுவனங்களில் இந்த மாதிரி துரதிருஷ்டமான சம்பவங்கள் நடக்கும்போது சிறுபான்மையினர் என்றால் ஒரு பார்வையும், ஏழை மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்த இதர சமூகத்தினர் என்றால் வேறொரு பார்வையோடு பார்ப்பதையும் அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லா மக்களும் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்லும் மு.க.ஸ்டாலின் அந்த திருக்குறளை பின்பற்றி நடக்க வேண்டும்.

இதற்கு முன்பும் எத்தனையோ சம்பவங்கள் நடந்துள்ளன. நேற்று கூட செங்கல்பட்டில் ஒரு மாணவி உயிரை மாய்த்து இருக்கிறார். அதெல்லாம் அவரது கண்களுக்கு தெரியவில்லை.

இதுதான் ‘செலக்டிவ் மெக்கானிசம்‘ குறிப்பிட்ட நபர்களுக்காக வகுப்புவாத அரசியலாக மாற்ற முயற்சிப்பது கண்டனத்துக்குரியது.

பல கல்வி நிலையங்களில் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இதை அந்தந்த கல்வி நிறுவனங்களும், தேவைப்பட்டால் அரசும் இணைந்து தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும்.

போட்டிகள் நிறைந்த உலகில் தங்கள் மனதில் உள்ள எண்ணங்களை வீட்டிலும் சகஜமாக பரிமாறிக் கொள்ளும் சூழ்நிலை குறைந்து வருகிறது. வெளியே உள்ள சூழ்நிலைகளும் மன அழுத்தத்தை கொடுப்பதாகவே மாறி வருகின்றன. இதனால் மாணவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் பாதிக்கப்படும்.

கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் மீதான கண்காணிப்பை தீவிரமாக்க வேண்டும். அவர்கள் மன அழுத்தத்தை சோதிக்க வேண்டும். தேவைப்பட்டால் உதவி எண்கள், சிறப்பு பயிற்சி அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் விலை மதிப்புமிக்க இளைய சமுதாயத்தை காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News