செய்திகள்
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சர்வதேச வளரும் நட்சத்திரம், ஆசியா விருது வழங்கி கவுரவித்தனர்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமெரிக்காவில் 2-வது விருது

Published On 2019-11-11 10:38 GMT   |   Update On 2019-11-11 10:38 GMT
அமெரிக்காவில் அரசு முறை பயணமாக சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு 2-வதாக சர்வதேச வளரும் நட்சத்திரம் என்ற ஆசியா விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமெரிக்காவில் அரசு முறை பயணமாக 10 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த 8-ந்தேதி அமெரிக்கா சென்ற அவர் சிகாகோ நகரில் தமிழ்சங்கம் சார்பாக நடத்தப்பட்ட குழந்தைகள் தின விழாவில் பங்கேற்றார். சிகாகோ ஓக் புரூக் டெரேசில் 10-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக நடந்ததற்காக பாராட்டு விழாவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்க தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது.

இன்று சிகாகோவில் உள்ள மெடோவ்ஸ் கன்வென்சன் சென்டரில் ‘அமெரிக்க பல இன கூட்டமைப்பு’ சார்பில் நடைபெற்ற உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது - 2019 விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘சர்வதேச வளரும் நட்சத்திரம், ஆசியா விருது வழங்கி கவுரவித்தனர்.

விருது வழங்கிய குக் கன்ட்ரி தலைவர் டோனி பிரேக் விங்கிள், அமெரிக்க காங்கிரஸ்மேன் டேனி கே டேவிஸ், விருதினை தேர்வு செய்த நடுவர் டாக்டர் செனோபியா சோவெல், இணைத் தலைவர் மார்ட்டினோ டேங்ஹர், இந்திய தூதரக அதிகாரி சுதாகர் தலேலா, தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார், தமிழ்நாடு நிதித்துறை அரசு முதன்மைச் செயலர் கிருஷ்ணன், உலக தமிழ் இளைஞர் பேரவை தலைவர் டாக்டர் விஜயபிரபாகர் மற்றும் தமிழ் அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

விருதை பெற்றுக் கொண்ட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து பேசினார்.

சிகாகோ நகர நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஹிஸ்டன் நகருக்கு ஓ.பன்னீர் செல்வம் செல்கிறார். அங்கு தமிழ்நாட்டிற்கான புதிய திட்டங்களுக்கு தேவையான நிதி பெறுவது குறித்து உலக வங்கியின் தெற்காசிய பிரிவின் உயர் அதிகாரிகளுடன் விவாதிக்கிறார்.

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை திரட்டுவது குறித்து இண்டர்நே‌ஷனல் பைனாஸ் கார்ப்பரே‌ஷன் மற்றும் முக்கிய நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.

அதன்பிறகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்ந்த திட்டங்களை பார்வையிடுகிறார்.

சிகாகோ நகரில் உள்ள முக்கிய தொழில் முனைவோர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறார்.

நாளை சிகாகோ நகர் மேயர் இல்லினாய்ஸ் ஆளுனர் மற்றும் இதர முக்கிய பிரமுகர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசுகிறார்.
Tags:    

Similar News