செய்திகள்
சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

மானியமில்லா சிலிண்டர் விலை 76 ரூபாய் உயர்ந்தது

Published On 2019-11-01 03:24 GMT   |   Update On 2019-11-01 03:28 GMT
மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 76 ரூபாய் உயர்ந்து, 696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை அடிப்படையில் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்துக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அவ்வகையில் இந்த மாதத்துக்கான சமையல் எரிவாயு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த மாதத்தைக் காட்டிலும் கணிசமாக விலை உயர்ந்துள்ளது. 

சென்னையில் கடந்த மாதம் மானியமில்லா சிலிண்டரின் விலை 620 ரூபாயாக இருந்தது. இந்த மாதம் 76 ரூபாய் உயர்ந்து, 696 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் ரூ.681.50, கொல்கத்தாவில் ரூ.706, மும்பையில் ரூ.651 என்ற அளவில் மானியமில்லா சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

இதேபோல் சென்னையில் வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.1199-ஆக இருந்தது. தற்போது ரூ.120 அதிகரித்து, ரூ.1319 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சவுதி அரேபியாவில் எண்ணெய் வயலில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு, சர்வதேச சந்தையில் சவுதி அரேபியா அரசின் கச்சா எண்ணெய் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பெட்ரோலிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவ தொடங்கியது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து வருகிறது.
Tags:    

Similar News