செய்திகள்
துப்புரவு பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

டெங்கு ஆய்வின் போது தகராறு: குப்பை அள்ளும் வாகனங்களை நிறுத்தி துப்புரவு பணியாளர்கள் மறியல்

Published On 2019-10-30 10:43 GMT   |   Update On 2019-10-30 10:43 GMT
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே டெங்கு குறித்த ஆய்வின்போது ஏற்பட்ட தகராறில் குப்பை அள்ளும் வாகனங்களை நிறுத்தி துப்புரவு பணியாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் தீபாவளி மற்றும் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து தெருக்களில் குப்பைகளை அகற்றும் பணியிலும், டெங்கு கொசு உற்பத்திக்கான கழிவுநீரை அப்புறப்படுத்துவதிலும் துப்புரவு பணியாளர்கள் நேற்று ஈடுபட்டு இருந்தனர்.

இதில் தற்காலிக பணியாளர்கள் உள்பட பலர் பல்வேறு இடங்களில் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

வலங்கைமான் மகாமாரியம்மன் கோவில் அருகே வரதராஜன்பேட்டை தெருவில் டெங்கு ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வீட்டை சோதனை செய்த போது அந்த வீட்டின் உரிமையாளர், ஊர் முழுவதும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. என் வீட்டை வந்து தான் பார்க்க வேண்டுமா? என்று வாக்குவாதம் செய்தார். மேலும் துப்புரவு பணியாளர்களை திடீரென்று தாக்கினார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் அனைவரும் பேரூராட்சி அலுவலக வாயிலில் கும்பகோணம்- மன்னார்குடி மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது குப்பைகள் அள்ளும் வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி வைத்திருந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த தாசில்தார் இஞ்ஞாசிராஜ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். மேலும் பேரூராட்சி அலுவலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News